• Mon. Oct 20th, 2025

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓபிஎஸ்!.. டி.ஜெயக்குமார் பேட்டி

Byமு.மு

Jan 11, 2024
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை.

கழக மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் இந்த கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் உரிமை உள்ள ஒரே கட்சி கழகம்தான். மொழியை வைத்து வியாபாரம் செய்கின்ற கும்பல் திராவிட முன்னேற்றக் கழக கும்பல்.மொழியை வளர்ப்பது கழகம்தான்.கோப்புகளில் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என சொன்னவர் எம்.ஜிஆர். தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படக்கூடிய இயக்கம் அதிமுக தான்.

ஓபிஎஸ் அதிமுக கட்சியின் சின்னம் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை தொடரும் என நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்.இந்தத் தீர்ப்பை கழக தொண்டர்கள் மகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.ஓபிஎஸ் கழகத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்.உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர். குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் இது போன்ற நீதிமன்ற நடவடிக்கைளில் ஈடுபடுகிறார்.

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசுதான் இந்த திமுக அரசு..சினிமா பாடலை போட்டு நடனமாடி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கொச்சைப்படுத்தி விட்டனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறப் போவதில்லை.

ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பாஜகவிடமிருந்து அதிமுகவிற்கு அழைப்பு வந்துள்ளது. செல்லலாமா? வேண்டாமா ? என்பது குறித்து கட்சி முடிவு எடுக்கும்.கழகம் பங்கேற்பது என்பது கொள்கை முடிவு. அது குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும்.

ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றிணைவது என்பது எப்பொழுதும் நடக்காது.
மெக்டானல்ஸ் கோல்ட் 17 எம்எம் வந்துச்சு.ஆனா அதற்கு பிறகு 70 எம்எம் இன்னும் வரலை.அது மாதிரி ஒரு ரீல் சுத்துற கதை இது..நல்லா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க.இது எல்லாம் நடக்காது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.