• Sun. Oct 19th, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார்!… விஜய்

Byமு.மு

Aug 22, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார்!... விஜய்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்து, சிறப்பு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நாடெங்கும் நம் கொடி பறக்கும் தமிழ்நாடு இனி சிறக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விஜய், கொடியை அறிமுகம் செய்து வைத்த கையோடு அதற்காக தமன் இசையில் உருவாக்கப்பட்ட பிரத்யேக பாடலையும் வெளியிட்டார். இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்தில் இந்த கொடி அறிமுக விழா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 250க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் வரவழைக்கட்டுள்ளனர். அங்கு வந்துள்ள நிர்வாகிகளுக்கு காலை மற்றும் மதிய உணவுகளும் தயார் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் நடிகர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய்யின் கட்சி நிகழ்வில் அவரின் பெற்றோர் கலந்துகொள்வது இதுவே முதன்முறை ஆகும். ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா இந்த நிகழ்ச்சியில் ஆப்செண்ட் ஆகி இருக்கிறார். வெள்ளைச்சட்டை அணிந்து வந்து இந்த கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டார் நடிகர் விஜய். விழா நடைபெறும் அரங்கிற்கு வந்ததும் முதல் ஆளாக தனது பெற்றோரை சந்தித்து ஆசிபெற்றார் நடிகர் விஜய்.

விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதில் இரண்டு யானைகளும், நடுவே வாகைப் பூவும் இடம்பெற்று இருக்கிறது. கொடி அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் அக்கொடியை ஏற்றினார் தளபதி விஜய். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் ஆர்ப்பரித்து தளபதி என கோஷமிட்டனர்.