• Sat. Oct 18th, 2025

எம்ஜிஆரின் ராசி தொடருமா?

எம்.ஜி.ஆர் சினிமா அரசியல் என்று இரு துறையிலும் வெற்றி பெற்ற மாபெரும் தலைவர் ஆவார். எம்.ஜி.ஆரின் யோகம் நடிகர் விஜய்க்கும் தொடருமா

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எண்ணற்ற அரசியல் தலைவர்களை திரைத்துறை அளித்துள்ளது.

எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக திகழ்ந்துள்ளனர்.

ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று அரை நூற்றாண்டுக்கு மேலாக அரசியலில் கோலோச்சி இருந்தார்.

திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வந்த எம்.ஜி.ஆர், அதிமுக கட்சியை தொடங்கி பங்கு பெற்ற முதல் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதல்வரானார். தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஆட்சியைப் பிடித்த தலைவரானார். இன்றளவும் மக்கள் மனதை கொண்ட மாபெரும் ஆளுமையாக எம்.ஜி.ஆர் உள்ளார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் அதிமுகவிற்கு தலைமை ஏற்று அதனை இந்திய அளவில் ஆ.இ.அதிமுகவாக ஜெயலலிதா உருவாக்கினார். மக்களிடம் இருந்த அதிமுக செல்வாக்கு மூலமாகவும், தன் தனி திறமையாலும், ஆறு முறை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளார். இந்திய அரசியலில் குறிப்பிடும்படியான மிகப்பெரிய பெண் ஆளுமை திரு. ஜெயலலிதா அவர்கள், என்றால் அது மிகையாகாது.

நடிப்பு திறமையால் கவர்ந்த சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலில் வெற்றிவாகை பெறவில்லை.  அரசியலில் மேலவை உறுப்பினராக பதவி வகித்தாலும் சொந்த கட்சி தொடங்கி, அவரால் அரசியலில் வெற்றி பெற இயலவில்லை.

மறைந்த நடிகர், அரசியல் தலைவர் எனும் பன்முகம் கொண்ட விஜயகாந்த், நடிப்பில் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டு, தேமுதிக என்னும் கட்சியை தொடங்கி சிறப்பான அரசியலில் ஈடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு உயர்ந்தும், அவரை அரசியல் அழுத்தம் பின்நாள்களிள் முடங்கச் செய்தது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திமுகவின் சார்பாக ஒரு முறை எம்பி ஆகவும் ஒருமுறை எம்எல்ஏ ஆகவும் இருந்துள்ளார். மேலும் தனி கட்சியோடு தொடர் அரசியலிலும் சினிமாவிலும் பயணித்து வருகின்றார்.

இயக்குனர் சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து முனைப்புடன் அரசியல் ஈடுபட்டு வருகின்றார். நாம் தமிழர் கட்சி, ஏழு சதவிகித வாக்கு வங்கியுடன் தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக உருவெடுக்க, சீமான் மிகப்பெரிய காரணம் ஆவார்.

உலக நாயகன் கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை தொடங்கி, பாதி அரசியலிலும், பாதி பிக்பாஸிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அரசியலில் சொல்லிக் கொள்ளுமாறு வெற்றி அவருக்கு இன்னும் அமையவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிக்கைகள் விட்டாலும், உடல் நிலை காரணமாக அரசியலில் நான் நிற்க போவதில்லை என்று விலகி விட்டார்.

இவர்களைப் போன்றே நடிகர்கள் நெப்போலியன், வாகை சந்திரசேகர், எஸ்.வி சேகர் போன்றோர், அரசியலில் நுழைந்து, பதவி வகித்து, இன்று முழு அளவில் அரசியலில் ஈடுபடாமல் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து திரை துறையில் பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர் விஜய் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டு, அரசியலில் முழுமையாக ஈடுபட போவதாக அறிக்கை விட்டுள்ளார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் எனும் பெயரை வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் சினிமா அரசியல் என்று இரு துறையிலும் வெற்றி பெற்ற மாபெரும் தலைவர் ஆவார். எம்.ஜி.ஆரின் யோகம் நடிகர் விஜய்க்கும் தொடருமா? என்பது அவர் அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவும், தமிழக மக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவு மூலமாகவும் வெகு விரைவில் தெரிந்து விடும்.