• Sat. Oct 18th, 2025

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்…. தமிழ்நாட்டில் ஜனவரி 19-ந் தேதி தொடக்கம்…

Byமு.மு

Dec 16, 2023
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்.... தமிழ்நாட்டில் ஜனவரி 19-ந் தேதி தொடங்கம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19-ந் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நாட்டின் பெருமைமிக்க விளையாட்டு நிகழ்வான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மற்றும் பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் (NSF) உடன் இணைந்து போட்டிக்கான ஏற்பாடு பணிகளைத் திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்- வீராங்கனைகளின் திறமைகளை வளர்ப்பதற்கும், அவர்களின் விளையாட்டுப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும் ஒரு தளமாக அமையும்.

இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் ஆதரிப்பதிலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் இந்தியாவின் அர்ப்பணிப்பின் அடையாளமாக உருவாகியுள்ளது. இது இளம் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தங்கள் திறமைகளையும், உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கனவுகளையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது.

தற்போது நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் மற்றும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக (Demo Sport) இடம்பெற உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தற்போது முதல் முறையாக ஸ்குவாஷ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டி அதிநவீன விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் இளம் விளையாட்டு வீரர்கள் வெற்றியடைய ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் அட்டவணை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் பிற விளையாட்டு ஆர்வலர்களுக்கு கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

நகரம்
விளையாட்டுகள்
சென்னை (20 விளையாட்டுகள்)தடகளம் (Athletics), கால்பந்து (Football), குத்துச்சண்டை (Boxing), வாள்வீச்சு (Fencing), வாலிபால் (Volleyball), பளு தூக்குதல் (Weightlifting), ஸ்குவாஷ் (Squash), வில்வித்தை (Archery), ஜூடோ (Judo), டேபிள் டென்னிஸ் (Table Tennis), பேட்மிண்டன் (Badminton), சைக்கிள் ஓட்டுதல் (Cycling), யோகாசனம் (Yogasana), மல்யுத்தம் (Wrestling), நீச்சல் (Swimming), ஜிம்னாஸ்டிக்ஸ் (Gymnastics), ஹாக்கி (Hockey), டென்னிஸ் (Tennis), துப்பாக்கி சுடுதல் (Shooting), கபாடி (Kabbadi)
திருச்சி (02 விளையாட்டுகள்)களரிபயட்டு (Kalaripayattu), மல்லக்கம்பம் (Mallakhamb)
கோயம்புத்தூர் (02 விளையாட்டுகள்)கூடைப்பந்து (Basketball), தாங் தா (Thang Ta
மதுரை (02 விளையாட்டுகள்)கட்கா (Gatka), கோ-கோ (Kho-Kho)

பொதுத் தன்னார்வலர் பதிவு: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டிக்கான தமிழ்நாடு பொதுத் தன்னார்வலர் பதிவிற்கான இணைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இணையதளத்தில் நேரலையில் உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சரியான தகவலுடன் படிவத்தை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பொதுத் தன்னார்வலர் பதிவு இணைப்பு:

https://www.tnsports.org.in/webapp/khelo volunteer registration.aspx