இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (01.02.2024) சென்னை, வளசரவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயிலில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியுதவியோடு ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் திருக்குளத்தை மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 776 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயில்களுக்கு சொந்தமான, திருக்குளத்தை மேம்படுத்தும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததை இன்றைக்கு ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணியை தொடங்கி வைத்துள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 1,339 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டும் 13 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. வளசரவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இத்திருக்கோயிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டுகின்ற பணிக்கான முயற்சியை துறை நிச்சயமாக மேற்கொள்ளும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில்களின் சொத்து மதிப்பு ரூ.5,572 கோடி ஆகும். நவீன ரோவர் கருவியின் மூலம் திருக்கோயில் நிலங்கள் இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
திருக்குளங்களை எடுத்துக் கொண்டால் இந்த அரசு பொறுப்பேற்றபின் ரூ.4.41 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திருக்குளங்கள் உருவாக்கிடவும், ரூ.78.44 கோடி மதிப்பீட்டில் 122 திருக்குளங்கள் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் மொத்தமுள்ள 2,359 திருக்குளங்களையும் தொடர்ந்து கண்காணித்து பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்தை மேம்படுத்தும் பணியினை 12 மாதங்களுக்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திராவிட முன்னேற்ற கழக அரசு உருவான பின் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருக்கோயில் திருப்பணிகள், திருக்குளங்கள், திருத்தேர்கள், பசுமடங்கள், பக்தர்கள் தங்குமிடங்கள், விருந்து மண்டபங்கள் முடி காணிக்கை மண்டபங்கள் என ரூ.4,157.70 கோடி மதிப்பீட்டிலான 18,788 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்பணிகளில் உபயதாரர்கள் ரூ.1,253 கோடி மதிப்பிலான 7,655 பணிகளை அதாவது மொத்தப் பணிகளில் மூன்றில் ஒரு பங்கினை மேற்கொண்டுள்ளனர். இது இந்த ஆட்சியின் மீது நன்கொடையாளர்கள் கொண்ட நன்மதிப்பு மற்றும் வழங்கும் நிதி முறையாக செலவிடப்படுகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. மாநில அளவிலான வல்லுநர் குழு இதுவரை 8,186 திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.
முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றபின் சந்தித்த கொரோனா பேரிடர், இரண்டு முறை சந்தித்த புயல் மற்றும் கனமழை போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய தமிழகத்திற்கு அதிகளவில் நிதி வழங்கிட கோரி பிரதமர் அவர்களிடமும், ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளார்கள். அண்மையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலுக்கு எந்தவிதமான நிதி உதவியும் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆகவே இன்று தாக்கல் செய்யப்படுகின்ற பட்ஜெட்டிலாவது தமிழ்நாட்டிற்கு அதிக நிதியையும் அதிக திட்டங்களையும் வழங்கிட வேண்டும்.
பழனி திருக்கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது இன்றைக்கு மீண்டும் மறுவிசாரணை அதே நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அதன் இறுதி தீர்ப்பு வந்த பிறகு துறையின் நிலைப்பாட்டை அரசோடு கலந்தாலோசித்து முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு நிச்சயம் தெரியப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் வே.ராஜன் இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, செயற்பொறியாளர் (தலைமையிடம்) செல்வராஜ், மாநகராட்சி உறுப்பினர்கள் எஸ். பாரதி, செல்வி ரமேஷ், முன்னாள் நகரமன்றத் தலைவர் வே.மதியழகன், அப்பன் சத்தியமூர்த்தி, திருக்கோயில் செயல் அலுவலர் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.