தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி, இயற்கை பேரிடரின்போது, அச்சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியினை சிறப்புடன் ஆற்றியதற்காக பாராட்டினார்.
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (25.12.2023) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இச்சந்திப்பின்போது, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் எதிர்பாராத பெரும் தாக்குதலை நிகழ்த்தியபோது, அந்த சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் இமைப்பொழுதும் துஞ்சாது ஓய்வின்றி சுற்றிச்சுழன்று பணியாற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, பாராட்டினார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் இச்சந்திப்பின்போது உடனிருந்தார்.