• Sun. Oct 19th, 2025

குப்பைகளை அகற்ற ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் அனுமதி!.

Byமு.மு

Feb 26, 2024
குப்பைகளை அகற்ற ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் அனுமதி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ஒன்றிய மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் தாம்பரம் மாநகராட்சியில் ஆப்பூர் குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் (Blo mining) அகற்ற முறையே ரூ.35.99 கோடி மற்றும் ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியாக, தூய்மை பழக்க வழக்கங்களை நீடித்து நிலைநிறுத்தும் பொருட்டு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் நாள் தூய்மை இந்தியா திட்டம் (நகர்ப்புரம்) 2.0 தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களையும் தூய்மையாகவும் மற்றும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும், மேலும் இத்திட்டத்தின் மூலம் 100% திடக்கழிவுகளை அறிவியல் முறையில் தீர்வு செய்தல், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்தல், நெகிழி கழிவு மேலாண்மை மற்றும் அனைத்து தேக்கத்திடக் கழிவுகள் கொட்டும் இடங்களையும் சரிசெய்வதே தூய்மை இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கங்கள் ஆகும்.

தேக்கத்திடக்கழிவு மேலாண்மை – உயிரி அகழாய்வு முறை (Blomining Project)
பத்து ஆண்டுகளுக்கு மேல் தேங்கியுள்ள தேக்கத்திடக்கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் (Bio-mining) முறையில், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையில் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு, மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை நிலத்தின் தன்மைக்கேற்ப நகர்வனங்களாகவோ, பூங்காக்களாகவோ மாற்ற உறுதி பூண்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் ஆப்பூர் குப்பை கிடங்கில் பத்தாண்டுகளுக்கு மேலுள்ள பழைய தேக்கத்திட கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற, ரூ.35.99 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளவும் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் பத்தாண்டுகளுக்கு மேலுள்ள பழைய தேக்கத்திட கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற, ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளவும் ஆக மொத்தம் ரூ.94.53 கோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்துவதால் தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளை தூய்மையாகவும், குப்பை இல்லா நகரமாகவும் மாற்றலாம். இதன் மூலம் பசுமை வெளிகள், பூங்காக்கள், அந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.