மாநில எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் தலைமை
செயலாளர் திரு சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று
நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும், சென்னை பெட்ரோ
கெமிக்கல்ஸ் நிறுவனத்தின்(CPCL) அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து
கொண்டனர். எண்ணூர் கிரீக் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப்
பணிகளையும், பாதிக்கப்பட்ட கிராமங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது.
தற்போது, அப்பகுதியில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று
வருகின்றன. எண்ணெய் பரவுவதைக் தடுப்பதற்காக பூமர்கள் (Boomers) வைக்கப்பட்டுள்ளன.
கிரீக்கிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக எண்ணெய் ஸ்கிம்மர் இயந்திரம்
இன்று பயன்படுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களில் மேலும் நான்கு எண்ணெய்
ஸ்கிம்மர்களை பயன்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை
விரைவுபடுத்திட 75 படகுகள் மற்றும் 300 பணியாட்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
இந்தப் படகுகள், தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து எண்ணெயை உறிஞ்சி
பாதுகாப்பாக கரைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேற்பரப்பில் இருந்து எண்ணெயை உறிஞ்சுவதற்கு நான்கு கல்லி சக்கர்
இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஜே.சி.பி மற்றும் பிற சாதனங்களைக் கொண்டு அருகிலுள்ள கிராமங்களில்
இருந்து எண்ணெய் படிந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் பூமர்கள், ஸ்கிம்மர்கள் மற்றும் பயிற்சி
பெற்ற மனிதவளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் அகற்றும்
பணிகளை மேலும் விரைவுபடுத்த சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ்
நிறுவனத்திற்கு (CPCL) உத்தரவிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்களில்
வசிக்கும் பொது மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக, மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ
முகாம்களை அமைத்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட
சாலைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாமையும்
ஏற்பாடு செய்துள்ளது.
வனத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
(TNPCB), சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் கண்காணிப்புக் குழுக்கள்
கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும்
வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.சுப்ரியா சாஹு
உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், எண்ணெய் அகற்றும் இடத்திற்கு சென்று
பார்வையிட்டு தக்க அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.