• Sun. Oct 19th, 2025

தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது-டி.டி.வி.தினகரன்

Byமு.மு

Dec 14, 2023

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்குள் வந்த தமிழ்நாட்டு பெண் பயணியிடம், இந்தி தான் தேசிய மொழி, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மிரட்டும் தொணியில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு மொழிகளைப் போல இந்தியும் ஒரு அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படும் வீரர்கள் இந்தி பேசச்சொல்லி பயணிகளை கட்டாயப்படுத்துவதாக வரும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன.

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை அனைவரும் மீண்டும் உணர வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, கோவா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்து மொழிகளுக்கும் உண்டான மரியாதை வழங்குவதை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.