இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (26.1.2024) காலை 10.30 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை (TN- BEAT Expo 2024) தொடங்கி வைத்தார்கள். இந்த கண்காட்சி இன்றும் நாளையும் (ஜனவரி 26, 27) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மாபெரும் கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 5,000-க்கும் மேற்பட்ட விற்பனைப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் 410க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு
நாளையும் நடைபெறும் இந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.
உங்களது வருகை ஆதி திராவிட – பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்!