தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (02.02.2024) 1,000 ஆண்டுகள் தொன்மையான கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர், அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலை புனரமைக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் அருள்மிகு நாட்ராயசாமி திருக்கோயிலில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் புதிதாக ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அவிநாசி, அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவர் தந்த உற்சாகம் மற்றும் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை புதுப்பொலிவோடு வீறுநடைபோட்டு வருகிறது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷமான ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அத்திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள கடந்த இரண்டு நிதியாண்டுகளில் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.200 கோடியை முதலமைச்சர் அவர்கள் அரசு மானியமாக வழங்கினார். இந்நிதியுடன் உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து 197 திருக்கோயில்களில் ரூ.304.84 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 12 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுப் பெற்றுள்ளது.
இன்றைய தினம் திருமுக்கூடலூர், அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலை புனரமைக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 11 திருப்பணிகள் மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் குடமுழுக்கை வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திடும் வகையில் அனைத்துப் பணிகளும் விரைவுப்படுத்தப்படும்.
அதேபோல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான சோமூர், அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயிலையும் புனரமைத்திட வரும் நிதியாண்டிற்கான திருப்பணி பட்டியலில் சேர்த்திட உத்தரவிட்டுள்ளோம். வரலாற்றில் நாம் படித்த வகையில் இராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில்தான் திருக்கோயில்கள் உயர்வு பெற்றன என்பார்கள். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் தான் இதுபோன்ற தொன்மையான திருக்கோயில்கள் புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தரும் சிறந்த ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் 400 ஆண்டுகளுக்கு பின் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பின் இராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கும், 123 ஆண்டுகளுக்குப் பின் திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், அருள்மிகு பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி திருக்கோயிலுக்கும், நேற்றைய தினம் 60 ஆண்டுகளுக்கு பின் மாமல்லபுரம், அருள்மிகு தலசயன பெருமாள் திருக்கோயிலுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற 16 திருக்கோயில்களின் குடமுழுக்குகள் உள்பட இதுவரை 1,355 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது.
அவிநாசி, அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதி ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் ஆறுமாத காலத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. காங்கேயம் வட்டம், வெள்ளகோவில், அருள்மிகு நாட்ராயசுவாமி திருக்கோயிலில் ஒருவேளை அன்னதானத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில் நாள் முழுவதும் அன்னதானம் 11 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானம் 763 திருக்கோயில்களிலும் ஆகமொத்தம் இதுவரை 774 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் இதுபோன்ற பணிகளை ஆன்மிப் பெரியோர்களும், பக்தர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது எங்களது பணிகளுக்கு புது உத்வேகத்தை அளித்து வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி.செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), இரா.மாணிக்கம் (குளித்தலை), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணைமேயர் ப.சரவணன், திருப்பூர் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் இல.பத்மநாபன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், இந்து சமய அறநிலைத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை, உதவி ஆணையர்கள் நா.நந்தகுமார், பி.ஜெயதேவி, மாவட்ட அறங்காவலர்க் குழுத் தலைவர்கள் கு.பால்ராஜ், கீர்த்தி சுப்பிரமணியன், அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சக்திவேல், அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.