• Sun. Oct 19th, 2025

கழகமே குடும்பம் என்பது அதிமுக, குடும்பமே கழகம் என்பது திமுக -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Byமு.மு

Mar 5, 2024
கழகமே குடும்பம் என்பது அதிமுக, குடும்பமே கழகம் என்பது திமுக -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுக-விற்கு கழகமே குடும்பம் என்றும், திமுகவிற்கு குடும்பமே கழகம் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் டிஅமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக ஆஜராகி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் 17 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தன காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக மாநில உரிமைக்காக எதையுமே செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

1998 ஆம் ஆண்டு காவேரி நீரை பெற்று தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழக விவசாயிகள் நலன் கருதி பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சி அதிமுக என்றும்,மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்காக என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக உள்ள போது, தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏன் கொண்டு வரக்கூடாது எனவும், தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர என்ன நடவடிக்கையை இந்த விடியா திமுக அரசு எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.

மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்தின் நலனுக்காக எவ்வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சியின் போது இயற்கை பேரிடரை சமாளிப்பதற்காக ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு தொகை கேட்டதாகவும், ஆனால் பாஜக அரசு 6000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியதாகவும் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து நேற்று அதிமுக நடத்திய வெற்றிகரமான போராட்டத்தை திசை திருப்பவே ஆளுநர் கால்டுவெல் பற்றியும், ஜி யு போப் பற்றியும் தவறான தகவல்களை கூறி வருவதாக குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இதிலிருந்து ஆளுநருக்கும் திமுக விற்கும் இடையேயான உறவு என்னவென்று தெரிந்து கொள்ள முடிகிறது என்றும் விமர்சித்தார்….

தமிழகத்தில் குடும்ப அரசியல் நடப்பதாக பிரதமர் மோடி விமர்சித்து உள்ளாரே என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கழகத்தில் அனைவரும் குடும்பம் போல பழகி வருகிறோம் எனவே அதிமுகவை பொருத்தவரை கழகமே குடும்பம், ஆனால் திமுகவை பொருத்தவரை குடும்பமே கழகம் என்றும்,பிரதமர் மோடி கூறிய குடும்ப அரசியல் திமுகவுக்கு தான் பொருந்தும் கழகத்திற்கு பொருந்தாது என்றும்  தெரிவித்தார்.