• Mon. Oct 20th, 2025

அம்ரூத் 2.0 திட்டம்: ரூ.1,996.50 கோடி மதிப்பீட்டில் 215 பணிகளை செயலாக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை!.

Byமு.மு

Mar 6, 2024
சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்திட ரூ.25 கோடி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.1,996.50 கோடி மதிப்பீட்டில் 215 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள்.

நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது, கழிவுநீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி/மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை வெளிகள், பூங்காக்கள் உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பங்களிப்புகளுடன், அடல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டம் 2.0 (அம்ரூத் 2.0) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.23.59 கோடி மதிப்பீட்டில் புதுக்கோட்டை நகராட்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 24×7 குடிநீர் வழங்கல் முன்னோடித் திட்டத்தினை (24×7 water supply system to the selected pilot water zones) செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், பல்வேறு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் மொத்தம் ரூ.16.68 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை புனரமைக்கும் 34 பணிகளும், ரூ. 4.70 கோடி மதிப்பீட்டில் பசுமை வெளிகள், பூங்காக்களை உருவாக்குவதற்கான 15 பணிகளும் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மேலும், பல்வேறு பேரூராட்சிகளில் மொத்தம் ரூ.25.37 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை புனரமைக்கும் 93 பணிகளும், ரூ.13.03 கோடி மதிப்பீட்டில் பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்களை உருவாக்குவதற்கான 68 பணிகளும் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மேலும், பொது மற்றும் தனியார் பங்களிப்பின் [Public Private Partnership Projects (PPP)] கீழ் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தினால் சென்னை பெருநகரத்திற்குட்பட்ட மண்டலம் X மற்றும் மண்டலம் XIII-60 24×7 குடிநீர் வழங்கல் திட்டத்தை செயல்படுத்த ரூ.760.00 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து சிட்கோ (SIDCO) எஸ்டேட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, நாளொன்றுக்கு 25 மில்லியன் லிட்டர் அளவுக்கு மறுபயன்பாட்டு நீரை வழங்கும் பொருட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.245.00 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சியில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளில்

முன்னோடி திட்டமாக 24×7 குடிநீர் வழங்கல் திட்டத்தை செயல்படுத்த ரூ.150.00 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாநகராட்சியில் 24×7 குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட ரூ.758.13 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.1,913.13 கோடி உத்தேச மதிப்பீட்டில் இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

இதன்மூலம், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1,996.50 கோடி மதிப்பீட்டில் 215 பணிகளை செயலாக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட நகரங்கள், நீர்நிலைகளை மேம்படுத்தவும் அதன் மூலம் குடிநீர் ஆதாரங்களை உறுதிப்படுத்தவும் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் சுத்திகரிக்கவும் ஏதுவாக அமையும். மேலும், பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள், இந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.