• Sat. Oct 18th, 2025

கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் திறந்து வைத்தார்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Byமு.மு

Feb 29, 2024
கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் திறந்து வைத்தார்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் 10 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த படித்த ஏராளமான இளைஞர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள தன்னார்வலர்கள் மூலம் நடைபெறும் பயிற்சி மையங்களுக்குச் சென்று, திறந்தவெளியில் போதிய அடிப்படை வசதிகளின்றி படித்து வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும், அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் தேர்ச்சி பெற்றிடும் வகையிலும், பாதுகாப்பான, காற்றோட்டமான வசதியுடன் தரமான பயிற்சியினை ஆண்டு முழுவதும் இலவசமாக வழங்கிடும் வகையிலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளஞ்சிபட்டியில் 4 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைத்திட, 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான “நமக்கு நாமே” திட்டம் மூலம் 7 கோடியே 65 இலட்சம் ரூபாயும், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் 2022-23ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் 2022-23ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 50 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 10 கோடியே 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய பயிற்சி மையத்தின் தரைதளத்தில், 5608 சதுர அடி பரப்பளவில் 2 பயிற்சி வகுப்பறைகள், பணியாளர் அறை, பயிற்றுநர் அறை, கணினி ஆய்வகம், நுாலகம், வாகனங்கள் நிறுத்துமிடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் 5985 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட கருத்தரங்கக்கூடமும், முதல்தளத்தில் 3896 சதுர அடி பரப்பளவில் கணினி நுாலகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உணவருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உட்புற சாலை வசதிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புச் சுவர் வசதிகள், நுழைவு வாயில், குடிநீர் வசதி, புல்வெளி மற்றும் தோட்ட அலங்கார வசதிகள் போன்ற அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பான சூழலில் படிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மையத்தில், ஒன்றிய. மாநில அரசுத் தேர்வாணையங்களது ஆண்டுத்திட்ட நிரல்களின்படி நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் தேர்ந்த பயிற்றுநர்கள் மற்றும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களுக்கேற்ப ஆயிரக்கணக்கான சிறந்த பாடப்புத்தகங்கள் கொண்ட நுாலகமும், மின் நுால்கள் கொண்ட மின் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில் முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் பெறப்பட்டு நூலகத்தில் பராமரிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப. வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.