மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

இதையடுத்து, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 450 கோடி வழங்கியது. மேலும், மத்திய அரசின் சார்பில் ஒரு குழு தமிழகம் வந்து சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு (டிசம்பர் 11) மத்திய குழு சென்ன வந்தது. மத்திய குழுவின் தலைவராக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திரு. குணால் சத்யார்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்து வெள்ள சேதத்தை ஆய்வு செய்து வருகிறது.

இதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திரு. குணால் சத்யார்த்தி, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரி திரு. திமான் சிங், மத்திய மின்துறை இணை இயக்குனர் திரு. ரங்கநாத் ஆடம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தெற்கு பகுதியில் தங்களது ஆய்வை மேற்கொண்டனர். வேளச்சேரி, மடிப்பாக்கம், ரேடியல் சாலை, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை, தாம்பரம் – வேளச்சேரி நெடுஞ்சாலை, பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோன்று, வடக்கு பிரிவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன்துறை இணை இயக்குநர் டாக்டர். ஏ. கே. சிவ்ஹரே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் திரு. விஜயகுமார் மற்றும் திருமிகு. பவ்யா பாண்டே உள்ளிட்டோர் சேதம் அடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பட்டாளம், புளியந்தோப்பு, கணேசபுரம் சுரங்கபாதை, மணலி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு. ககன் தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.