அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியே வரும் மிகுதியான நீர் போக்கு கால்வாய் வழியாக ,அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் வழியாக கொரட்டூர் ஏரியையும், லூகாஸ் டிவிஎஸ் கால்வாயையும் வந்தடையும்.
இந்த அம்பத்தூர் போக்கு கால்வாயில் அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியினுடைய கழிவுநீர் வருவதாலும், கொரட்டூர் ஏரியில் கழிவு நீரை திறந்து விடக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு இருப்பதால், ஆண்டு முழுவதும் அம்பத்தூர் கால்வாயில் கழிவுநீர் தேக்கி வைக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் இருந்தே பெருமழை பெய்யும் போதெல்லாம், தண்ணீர் அதிகமாக வந்து அம்பத்தூர் எஸ்டேட், சிட்கோ , டிடிபி காலனி, பட்டரவாக்கம் போன்றவை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு இணங்க, அரசு இயந்திரங்கள் கொரட்டூர் ஏரியின் மதகை திறந்து விட்டு கழிவு நீரையும் , மழை நீரையும் கலந்து உள்ளே அனுப்புகின்றன. இந்த ஆண்டு மழை வெள்ளத்தினால் ஏறக்குறைய பல நூறு கோடி ரூபாய்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அம்பத்தூர் எஸ்டேட்,சிட்கோ பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீரை டிவிஸ் லூகாஸ் கால்வாயில் அதிகமாக திறந்துவிடுவதால் கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ, நார்த் அவென்யூ, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், கொரட்டூர் வடக்கு பகுதிகள் பெருமளவு வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 6 நாட்களுக்கு மேலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
தீர்வுகள்
1. அயப்பாக்கம் , அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் போன்ற பகுதிகளுடைய கழிவு நீரை, அயப்பாக்கம் அம்பத்தூர் , கொரட்டூர் ஏரிகளுக்கு வரவிடாமல், முழுமையாக சுத்திகரிப்பு செய்த பின்பே விட வேண்டும்.
2.குறைந்தபட்சம் கொரட்டூர் ஏரிக்கு முன்னுள்ள ,கொரட்டூர் பம்பிங் ஸ்டேஷன் [ இப்போது வேலை செய்யாமல் உள்ளது] பகுதியிலாவது ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, தினமும் வருகின்ற கழிவுநீரை சுத்திகரித்து ஏரிக்குள் விட வேண்டும்.
3. லூகாஸ் tvs கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றும்போது ஏறக்குறைய 26 அடி இருந்த கால்வாயை முதன்மைப் பகுதியில் இருபது அடியாகவும், போகப் போக பத்தடியாக சுருக்கி விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் 200 அடி பாலத்தின் கீழ் ரெட்டேரிக்கும் செல்லும் பாதையை தடுத்து விட்டார்கள். கால்வாயின் உயரத்தை அதிகரித்தாலே தண்ணீர் சென்று விடும் என்ற மடத்தனத்தால், இன்று கொரட்டூர் வெள்ளக்கடாக மாறி உள்ளது.
4. லுகாஸ் டிவிஸ் கால்வாயின் இருபுறமும் உள்ள கொரட்டூர் பகுதியின் மழைநீர் சாலையின் வழியாகவே, வலிந்துவந்து கால்வாயில் மேலிருந்து விழுமாறு செய்திருந்தால், இந்நேரம் அந்த பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கும். மழைநீர் கால்வாய்கள் அமைத்தும், அது பயன்படாமல் உள்ளது.
5. லூகாஸ் டி வி எஸ் கால்வாயில் முழுமையாக தண்ணீர் செல்வதால், சிட்கோ நகரிலிருந்து வெளிவரும் தண்ணீர் வெளியேறாமல் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது ஓட்டேறி நல்லாவில் கலப்பதால், அங்கும் வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை பழைய படியே ரெட்டேரிக்கும், ஓட்டேறி நல்லா கால்வாய்க்கும் செல்லுமாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
6. அம்பத்தூர், கொரட்டூர், ரெட்டேரி இந்த மூன்று ஏரிகளும் 1400 ஏக்கர் பரப்பளவு உள்ள சங்கிலி தொடர் ஏரிகள் ஆகும். இந்த ஏரிகளின் சராசரி ஆழம் 20 அடியாக இருக்குமானால், ஏறக்குறைய 1.2 டிஎம்சி அளவுக்கு நீரை சேமிக்க முடியும். இந்த ஏரிகளில் கழிவு நீர் கலக்காமல், ஏரியை தூய்மைப்படுத்தி, ஆழப்படுத்தி இருந்தால் இன்றைக்கு பாதிக்கப்பட்டு இருக்கிற அம்பத்தூர் ஏரி சுற்று வட்டார பகுதிகள், அம்பத்தூர் எஸ்டேட் ,சிட்கோ , கொரட்டூர் பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கும். அதிகப்படியான வெள்ளம் வராமல் நீரும் சேமிக்கப்பட்டிருக்கும். வெயில்காலங்களில் அதனை பயன்படுத்தி வறட்சி வராமலும் பாதுகாத்திருக்கலாம்.