• Sat. Oct 18th, 2025

கால்நடை பராமரிப்புத் துறை: ரூ.14.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்!. முதலமைச்சர் மு க ஸ்டாலின்..

Byமு.மு

Feb 29, 2024
ரூ.14.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்!.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.14.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 14 கோடியே 14 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் 5 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்கக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

கால்நடை பராமரிப்புத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் மற்றும் இலுப்பூர் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்;

தேனி மாவட்டத்தில் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் தேனியில் ஒருங்கிணைந்த இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் மற்றும் உத்தமபாளையம் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்;

சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனைக் கட்டடம்; அரியலூரில் 1 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம்;

கரூர் மாவட்டம், குளித்தலையில் 1 கோடியே 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் மற்றும் கால்நடை மருந்தகக் கட்டடம்;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கால்நடைப் பண்ணையில் 2 கோடியே 9 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இனவிருத்தி காளைகளை தனிமைப்படுத்துதலுக்கான கட்டடம்;

என மொத்தம் 14 கோடியே 14 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்புத் துறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல் சிறந்த இனப்பெருக்க நாட்டு நாய்களை செல்லப்பிராணி வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு நாட்டின நாய்களின் மரபணுக்களை பெருக்கும் வகையில், சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் 5 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்கக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் எஸ். அமிர்த ஜோதி, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.