• Mon. Oct 20th, 2025

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடைபெறும் இடங்களை தலைமைச் செயலாளர் ஆய்வு!

Byமு.மு

Jan 10, 2024
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடைபெறும் இடங்களை தலைமைச் செயலாளர் ஆய்வு

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.

6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாடு வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து, 6000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக சென்னையில் போட்டி நடைபெற உள்ள விளையாட்டு மைதானங்களும் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. தொடக்க விழா  நடைபெறும் சென்னை ஜவஹர்லால் நேரு  விளையாட்டரங்க மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை அமைக்கப்பட்டு வருகின்றன.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் மைதான சீரமைப்பு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று (10.01.2024) தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, அவர்கள்   கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறும் இடங்களான ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம்,  மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம், வேளச்சேரி நீச்சல் குள வளாகம் மற்றும் வேளச்சேரி, குரு நானக் கல்லூரி ஆகிய இடங்களில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குரு நானக் கல்லூரியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 10 மீட்டர் பாதைகளை தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும்  வேளச்சேரி  நீச்சல் குளவளாகத்தை ஆய்வு செய்த போது அங்கு வீரர், வீராங்கனைகள் உடை மாற்றும் அறையை பார்வையிட்டார். இதன் பின்னர் இதே வளாகத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் மையத்தை ஆய்வு செய்த அவர், போட்டி நடைபெறும் பகுதியில் காற்றோட்ட வசதி இருக்குமாறும் அறிவுறுத்தினார். இங்குள்ள உள்ளரங்க பாட்மிண்டன் மைதானத்தின் வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும்   நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்துக்கு சென்ற தலைமைச் செயலாளர் அவர்கள், பிரதான ஆடுகளம் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள ஆடுகளங்களையும் ஆய்வு செய்தார். போட்டியை காண ஏராளமானோர் வருகைதரக்கூடும் என்பதால் சுற்றுப்புறத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இதையடுத்து யோகா, மல்யுத்த போட்டிகள் நடைபெற உள்ள இராஜரத்தினம் மைதானத்துக்கு சென்ற தலைமைச் செயலாளர் அவர்கள், அங்கு வீரர், வீராங்கனைகளுக்கு செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதிகள் கேட்டறிந்தார். மேலும், பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் ஆய்வு பணி மேற்கொண்டார். அங்குள்ள வீரர்கள் ஓய்வு அறையையும், தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டார்.

அப்போது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாடு ஹாக்கி அணிகளின் வீரர், வீராங்கனைகளை தலைமைச் செயலாளர் அவர்கள் சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு,  இரு அணி வீரர்களுக்கும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கூறினார். நீங்கள் விளையாடும் போட்டியை நேரில் காண வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தலைமைச் செயலாளர் அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மைதான வளாகத்தில் புதிதாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், வண்ணமயமாக அமைக்கப்பட்டு வரும் செயற்கை ஓடுதளம் பாதை ஆகியவற்றையும் பார்வையிட்டார். தொடக்க விழா நடைபெறும் பகுதியையும், அவர் ஆய்வு செய்தார். இதன் பின்னர் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கேலோ இந்தியா தலைமை அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.