• Sun. Oct 19th, 2025

பிப்ரவரி 2 – உலக சதுப்புநில நாள்: இழந்த சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கு உறுதியேற்க வேண்டும்!

Byமு.மு

Feb 2, 2024
இழந்த சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கான உறுதியேற்க வேண்டும்

இன்று உலக சதுப்புநில நாள் (#WorldWetlandsDay). நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே ஆகும். குளம், குட்டை, ஏரி, கழிமுகம், முகத்துவாரம், சதுப்பளம், கடலோர சதுப்புநிலக் காடுகள், காயல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து சதுப்புநிலங்களையும் முழு அளவில் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பன்னாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களை காப்பதற்கான உலகளாவிய உடன்படிக்கை (Convention on Wetlands), ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 1971 பிப்ரவரி 2ஆம் நாள் எட்டப்பட்டது. அதுவே உலக சதுப்புநில நாளாக ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சதுப்புநிலங்களும் மனித நலவாழ்வும்’ (Wetlands and Human Wellbeing) என்பது இந்த ஆண்டுக்கான உலக சதுப்புநில நாள் முழக்கமாகும். இவ்வாண்டின் உலக சதுப்புநில நாள் கொண்டாடப்படும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 15 இடங்கள் பன்னாட்டு ராம்சார் சதுப்புநிலங்கள் பட்டியலில் (#RamsarList) புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். உலக வங்கியின் ரூ. 2000 கோடி நிதியுதவியுடன் கடலோர மீளுருவாக்க திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்புகள் உண்மையாகவே சுற்றுச்சூழலை காப்பதாக அமைய வேண்டும்.

குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் அதையொட்டியுள்ள பகுதியை வலசை பறவைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். மேலும், எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து சதுப்புநிலங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என உலக சதுப்புநில நாளில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.