சென்னை மதுரவாயல் அருகில் உள்ள அடையாளம் பட்டு ஏரியை அரசியல்வாதி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு புனரமைக்க அறப்போர் புகார்.
சென்னை மதுரவாயலுக்கு அருகிலுள்ள சுமார் 2.57 ஏக்கர் அளவில் உள்ள அடையாளம்பட்டு ஏரியை ஆக்கிரமித்துள்ள டாஸ்மாக் காண்ட்ராக்டர் மற்றும் அரசியல்வாதி பாண்டுரங்கன் அவர்களிடமிருந்து மீட்டெடுத்து இந்த ஏரியை முழுவதுமாக புனரமைக்க அறப்போர் இயக்கம் இன்றைய தினம் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளது.
அறப்போர் இயக்கம் அடையாளம்பட்டு ஏரி குறித்தான ஆதாரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெற்றது. மற்றும் இந்த நீர் நிலையை நேரில் சென்று ஆய்வும் செய்தது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக அறப்போர் இயக்கத்திற்கு பூந்தமல்லி துணை தாசில்தார் கொடுத்த தகவல் படி வருவாய்த்துறை அ பதிவேட்டில் அடையாளம்பட்டு கிராமம் பூந்தமல்லி தாலுக்காவில் சர்வே எண் 52/1 1.04 ஹெக்டர் ( அதாவது 2.57 ஏக்கர்) அளவில் இன்றைய தினம் வரை அடையாளம்பட்டு ஏரி என்று உள்ளது. இதற்கான நகல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றோம். மேலும் FMB வரைபடமும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றோம். நில ஆணையரகத்தில் இருந்து அடையாளம் பட்டு கிராமத்தின் வரைபடமும் பெற்றோம். இவை அனைத்தும் ஆவணப்படி இது ஏரியாக இருப்பதை தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது .இந்த ஆதாரங்களை புகாருடன் இணைத்துள்ளோம்.
ஆனால் நேரில் சென்று பார்த்த பொழுது அந்த இடத்தில் பாண்டுரங்கன் என்னும் டாஸ்மாக் போக்குவரத்து கான்ட்ராக்டர் மற்றும் அரசியல்வாதி இந்த ஏரியை முழுவதுமாக ஆக்கிரமித்து அதில் தனது டாஸ்மாக் வண்டிகளை நிறுத்தி வருவதும் மற்றும் அங்கு மெக்கானிக் கராஜ் போன்றவைகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது. இவருக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் தாசில்தார் மற்றும் மற்றவர்களின் கூட்டு சதியுடன் தொடர்ந்து இந்த ஏரியை ஆக்கிரமித்து வருவதாக தெரிகிறது.
2023 பெரு வெள்ளம் வந்த பிறகும் கூட அரசு பாடம் கற்காமல் தொடர்ந்து அரசியல்வாதிகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்டு ஏரிகளை இப்படி தாரை வார்த்து கொடுப்பதே நம் வீடுகளுக்குள் வெள்ளம் வர ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் மிகப்பெரிய அளவில் தண்ணீரை தேக்கி வைக்க கூடிய இது போன்ற ஏரிகள் அந்தப் பகுதியின் நிலத்தடி நீருக்கும் ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே இது போன்ற ஒரு ஏரி வெள்ளம் மற்றும் வறட்சி என இரண்டிலிருந்தும் மக்களை காக்கக்கூடிய ஒன்றாக அமையும்.
எனவே இந்த ஏரியை உடனடியாக திரு பாண்டுரங்கன் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஏரியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வருவாய்த்துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் அவர்களுக்கும் வருவாய்த்துறை செயலர் திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் பூந்தமல்லி தாசில்தார் என அனைவருக்கும் புகார் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த ஏரியை உடனடியாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பொதுமக்கள் வருகிற பிப்ரவரி 4 வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள கேளு சென்னை கேளு பொது நிகழ்வில் https://arappor.org/kck3_registration அரசை நோக்கி கேட்க உள்ளோம். சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்றும் தங்கள் இடங்களில் மீண்டும் வெள்ளம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் கேளு சென்னை கேளு மக்கள் மேடை நிகழ்வில் மக்கள் பேச உள்ளனர். இது போன்ற நீர் நிலைகளை அரசு உடனடியாக மீட்கும் வரை அறப்போர் தொடரும்.