• Sun. Oct 19th, 2025

“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ” உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!

Byமு.மு

Jan 13, 2024
"கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் " உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!

அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ” அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” 30.12.2023 அன்று திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.


இன்று (13.01.2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இம்முனையத்திலிருந்து போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.


அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து” தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து முனையம் திறக்கப்பட்ட நாளிலிருந்து படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஒரே சமயத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்க முடியாது. அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள் (SETC) இம்முனையத்திலிருந்து இயங்கி கொண்டு வருகிறது. பொங்கலுக்கு பிறகு, இம்முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் (Omni Buses) 24.01.2024 முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் (MTC) போதுமான அளவு தேவைக்கேற்ப இயக்கப்பட்டு வருகிறது.

இம்முனையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப இன்று மட்டும் சுமார் 4000 நடைகள் (Trips) சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன. இம்முனையத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் சீரான நிலையில் இயக்குவதற்கும் மற்றும் பொது மக்களுக்கு எந்த ஒரு குழப்பம் இல்லாமல் படிப்படியாக அனைத்து பேருந்துச் சேவைகளும் தொடர்வதற்கும் இக்கூட்டம் நடைபெற்றது.


இம்முனையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டிற்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயணிகள் உதவி மையம், பயணிகளை ஏற்றி செல்லும் மின்கல ஊர்திகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மின்கல ஊர்தி (Battery Vehicle for Differently-abled Persons), பயணிகள் பிரதான முனையத்திலிருந்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கு சுலபமாக வருவதற்கு மாற்று பாதை (MTC Plaza) அமைக்கப்படுவது மற்றும் உணவகங்கள் போதுமான அளவில் உள்ளனவா என இன்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பயணிகளிடம் விசாரித்த போது, இம்முனையத்தில் தேவையான அனைத்து வசதிகள் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

குறிப்பாக பயணிகளுக்கு ஆங்காங்கே பேருந்து வழித்தட நடைமேடை பலகை (Platform Destination Boards) போதுமான அளவில் வைக்க தெரிவித்தனார். மேலும் இம்முனையத்தில் பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை (Digital Signage Boards) வைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து முனையத்தை “பிளாஸ்டிக்-இல்லா முனையமாக” (Plastic-free Zone) செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிகழ்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., தாம்பரம் காவல் ஆணையாளர் / கூடுதல் தலைமை இயக்குநர் முனைவர் அ.அமல்ராஜ், இ.கா.ப., சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) சிறப்பு அலுவலர் ஐ.ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.எஸ்., போக்குவரத்துத் துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக (MTC) மேலாண்மை இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆர்.அழகுமீனா இ.ஆ.ப., காவல் துணை ஆணையர்கள் (தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு) பவன் குமார், இ.கா.ப., (போக்குவரத்து) ந.குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அனாமிகா ரமேஷ், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.