• Sat. Oct 18th, 2025

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது திமுகவினர் தாக்குதல்… டிடிவி தினகரன் கண்டனம்!.

Byமு.மு

Feb 29, 2024
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது திமுகவினர் தாக்குதல்... டிடிவி தினகரன் கண்டனம்

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனையை செய்தி சேகரிக்கச் சென்ற பாலிமர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதாக நாள்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், திமுகவினரால் கண்மூடித்தனமாக தாக்குதலுக்குள்ளான ஒளிப்பதிவாளர் செந்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் செந்தில் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் எந்தவித அச்சுறுத்தலுக்குள்ளாகமலும் அவரவர் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.