• Sun. Oct 19th, 2025

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் உள்ளது: ஜெயக்குமார்

Byமு.மு

Mar 2, 2024
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் உள்ளது: ஜெயக்குமார்

“செல்வ பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது என்றும்,அதற்காக தாங்கள் யாரிடமும் சென்று கூட்டணிக்காக கெஞ்சவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்”

“அதிமுக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக இருப்பதாகவும் பத்து நாட்களில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பது குறித்து பொதுச் செயலாளர் அறிவிப்பார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்’

“போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் மத்திய அரசு சுணக்கம் காட்டாமல் தீவிரமாக செயல்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்”

அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து, அவர்கள் உரிமையை மீட்டெடுக்கும் அளவிற்கு அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும்.

திமுகவை சேர்ந்தவர்களே போதை பொருள் கடத்தியுள்ளனர். எந்த கட்சியிலும் இல்லாத அயலக அணி பிரிவு போதை பொருள் கடத்துவதற்காகவே திமுகவில் உருவாக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு ஜாபர் சாதிக் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள், மேலும் அவரிடம் யாரெல்லாம் பணம் பெற்றுள்ளார்கள் என கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறினார்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் மங்கை படத்திற்கு ஜாபர் சாதிக் தான் தயாரிப்பாளர் அதுமட்டுமல்லாமல் டிஜிபி இடமே விருது வாங்கியுள்ளார்..அவரின் பின்னணி குறித்து கூட உளவுத்துறை விசாரிக்காமல் இருந்திருக்கிறார்கள் எனவே மத்திய அரசு சுணக்கம் கட்டாமல் விரைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கூறினார்.

திமுக காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை செல்வப் பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது. அதற்காக நாங்கள் யாரிடமும் சென்று கெஞ்சவில்லை என கூறினார்.

விட்டால் அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவார்கள் என பயந்து திமுக அவசர அவசரமாக கூட்டணி பங்கீடு செய்து வருவதாக கூறிய ஜெயக்குமார் கத்திரிக்காய் விளைந்தால் கடைத்தெருவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்பது போல இன்னும் 10 நாட்களில் யார் யார் எந்தெந்த கூட்டணிக்கு தாவி செல்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் எனவும் கூறினார்.

அதிமுக-வின் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவதற்கு கட்சிகள் தயாராக இருக்கின்றன.இன்னும் பத்து நாட்களில் எந்தெந்த கட்சிகள் என்பது குறித்து பொதுச் செயலாளர் அறிவிப்பார் எனவும் கூறினார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. வண்டலூரில் திமுகவின் ஒன்றிய செயலாளருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது.

மத்திய அரசுக்கு மாநில அரசு பல லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக கொடுக்கிறது ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல தான் மத்திய அரசு திருப்பிக் கொடுக்கிறது…இவ்வளவு பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்யக் கூடாது என கூறினார். வரி பகிர்வை சீரானதாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.