• Sun. Oct 19th, 2025

திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்! – சசிகலா

திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து, பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து துன்புறுத்தி வரும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்.

திமுக தலைமையிலான அரசு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து சிரமப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வரவேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையோடு இத்திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தார். அதன் தொடர்ச்சியாக திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, நிலுவையில் இருந்த பணிகளை முழுமையாக முடித்து கடந்த வருடமே கூட மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க முடியும்.

ஆனால், திமுக தலைமையிலான அரசு இரண்டரை ஆண்டு காலமாக தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டது போல், எந்தவித அடிப்படை தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்திடாமல் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்துள்ளதாகத்தான் தெரிகிறது. திமுகவினரின் இது போன்ற விளம்பர மோகத்திற்கு தமிழக மக்களை பலிகடா ஆக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பாணை வந்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனே அமுலுக்கு வந்துவிடும் என கருதி அதற்கு முன்பாக திட்டத்தை தொடங்கிவிட வேண்டும் என்ற அவசரத்திலும், மறைந்த தலைவர் திரு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா முடிவதற்குள் அவருடைய பெயரை சூட்டி கொண்டாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலும், மக்கள் நலனைப் புறம்தள்ளிவிட்டு அவசரகதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து மக்களை இவ்வாறு திண்டாட விடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

பேருந்து நிலையத்தின் அத்தியாவசிய தேவைகளான காவல்நிலையம், உணவகம், பொது மக்கள் வந்து செல்ல மாநகர பேருந்து வசதி போன்ற எதுவுமே இல்லாத நிலையில் அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விளம்பர திமுக அரசு திறந்துள்ளதால் உணவு சாப்பிட ஒரு உணவகம் இல்லாமல், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கக்கூட வழியில்லாமல் பயணிகள் பசியோடும், வெறும் வயிற்றோடும் பயணம் செய்யும் அவல நிலைக்கு திமுக தலைமையிலான அரசு தள்ளியுள்ளது.

அதேபோன்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் உரிய வழிகாட்டி பலகைகள் இல்லாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் எந்த நடைமேடையில், எந்த ஊருக்கு செல்லும் பேருந்துகள் நிற்கின்றன என்பது தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் விட்டவர்கள் போல பயணிகள் விழி பிதுங்கி நிற்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதேபோன்று, கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் பற்றி முறையான அறிவிப்பு வராததால் பயணிகள் எங்கு செல்வது எனத்தெரியாமல் தவித்து வருகின்றனர்.

தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்ற அறிவிப்பை ஆட்சியாளர்கள் மக்களிடையே சரிவர கொண்டு சேர்க்காததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டிய பயணிகள், தங்கள் பேருந்து எங்கிருந்து புறப்படுகிறது என்ற குழப்பத்தில், முதலில் கோயம்பேடுக்கு சென்று பின்னர் அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல ரயில் வசதி இல்லாததாலும், மாநகர பேருந்துகள் தேவையான அளவுக்கு இயக்கப்படாததாலும் ஆட்டோ, வாடகை டாக்ஸி ஆகியவற்றுக்கு கூடுதலாக செலவழித்து செல்ல வேண்டி இருப்பதாக மக்கள் சொல்லி வேதனைப்படுகின்றனர்

திமுகவினர் தமிழக மக்களின் நலனை புறம்தள்ளிவிட்டு தற்போது முழு நேரமும் எப்படியாவது நாடாளுமன்ற தேர்தலில் வென்று விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுகின்றனர்.

அதாவது திமுகவினருக்கு தற்போது திட்டங்கள் முடிந்துள்ளதா? என்பதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. இதேபோன்றுதான் தென் தமிழகமே மழை வெள்ளத்தால் தத்தளித்து கொண்டு இருந்தபோது திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகள் முழுமையடையாத நிலையில் சோதனை ஓட்டம் நடத்தி அதனால் பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, குளங்கள் உடைந்து மக்கள் தப்பிக்க வழியின்றி கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார்கள்.

இதுபோன்று திமுகவினர் அரைகுறையான திட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றுவதால் மக்கள் பாதிப்படைவது பற்றி கொஞ்சமும் சிந்திப்பது கிடையாது, திமுக தங்கள் ஆட்சியில் ரிப்பன் வெட்டி, தங்கள் பெயரை அங்கே பொறித்துவிட்டால் போதும் என்று நினைக்கிறது. ஆனால், தமிழக மக்களின் நிலைதான் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிகிக்கப்படுவதற்குள் திமுகவினர் தமிழகத்தில் இன்னும் என்ன என்ன கூத்துகளையெல்லாம் அரங்கேற்றபோகிறார்களோ? தெரியவில்லை.

திமுக கட்சியின் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவினர் தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்துவதில் யாருக்கும் எந்த கவலையும் இல்லை. ஆனால் அதனை திமுக கட்சி நிதியில் செய்திருக்கவேண்டும். இதற்கு எவ்வாறு மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கின்றனர் என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பாணை வந்தவுடன் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள், கட்சிகளின் பெயர் பலகைகள், கட்சிகளின் சின்னங்கள் போன்றவற்றை மறைத்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள். அதுபோன்று, திமுகவின் கட்சி சின்னத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் மறைத்து வைக்கப்படுமா? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலங்களில் இதுபோன்று எந்த ஒரு மக்கள் நலத் திட்டத்தையும் அரைகுறையாக கொண்டுவந்து ‘மக்களை துன்புறுத்தியது இல்லை என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், திமுகவினர் இதுபோன்று அரைகுறையான திட்டங்களை துவக்கிக்கொண்டு, மக்களிடம் ஏதாவது பொய்யை அள்ளிவீசிவிட்டு, எதிர்கட்சியினரை ஒன்றிணையவிடாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் போதும். மக்கள் தங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்துவிடுவார்கள் என்று திமுகவினர் கனவு காண்கின்றனர்.

ஆனால், திமுகவினரின் எண்ணம் ஈடேறாது. அவர்களின் கனவு. பகல் கனவாகும் காலம் நெருங்கிவிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினருக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.