• Mon. Oct 20th, 2025

அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!.

Byமு.மு

Feb 19, 2024
அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை நிரப்புவதற்கான அட்டவணை ஆகியவற்றை உடனடியாக வெளியிட தி.மு.க. அரசுக்கு கோரிக்கை

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 27,858 பேர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர்கள் என மொத்தம் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது “யானைப் பசிக்கு சோளப் பொறி” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, “அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்” மற்றும் “புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. முதல் வாக்குறுதியான 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதே நிறைவேற்றாத சூழ்நிலையில், இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது பற்றி பேசுவது வீணற்ற செயல். இந்த 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் தவிர, கடந்த மூன்று ஆண்டுகளில், ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழப்பு, ராஜினாமா ஆகியவற்றின்மூலம் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் காலிப் பணியிடங்கள் உருவாகியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 60,567 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்பதும், இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

உண்மையிலேயே, தி.மு.க. அரசுக்கு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற அக்கறை இருந்திருந்தால், ஆண்டிற்கு குறைந்தபட்சம் 70,000 பணியிடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. தி.மு.க. அரசின் காலந்தாழ்த்தும் நடவடிக்கை காரணமாக, போட்டித் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதினை கடந்து, தேர்வே எழுத முடியாத நிலைமைக்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 50 விழுக்காடு காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டுமென்று தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.