• Sun. Oct 19th, 2025

ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

Byமு.மு

Dec 25, 2023
ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

முன்னாள் ஒடிசா மாநில ஆளுநர் திரு. எம்.எம்.ராஜேந்திரன் அவர்களுக்கு
காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான திரு. எம்.எம்.ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.


1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் திரு. எம்.எம். ராஜேந்திரன் அவர்கள். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அண்ணாரின் மறைவு ஒரு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. எம்.எம். ராஜேந்திரன் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
திரு. மா. சுப்பிரமணியன் அவர்களால் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.