• Tue. Oct 21st, 2025

வீரமாமுனிவர் மணிமண்டபம் முதல்வர் திறப்பு!

Byமு.மு

Jan 23, 2024
வீரமாமுனிவர் மணிமண்டபம் முதல்வர் திறப்பு

வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மார்பளவு சிலை, பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்து, சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் “வாளுக்குவேலி அம்பலம்” மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு  திருவுருவச் சிலைகள்,  காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.1.2024 அன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் மார்பளவு சிலை, பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி அவர்களுக்கு திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் “வாளுக்குவேலி அம்பலம்” மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு  திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோரின் சந்திப்பின் நினைவாக சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்தில் அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும்,  செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு திருவுருவச்சிலை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு திருவுருவச் சிலை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலை, பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் ப. சுப்பராயன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு திருவுருவச் சிலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை, பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு திருவுருவச் சிலை, ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் அவர்களுக்கு மணிடபம், முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலை, அயோத்திதாசர் அவர்களுக்கு மண்டபம், என்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள், கவிஞர்கள், அறிஞர் பெருமக்களின் நினைவைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறந்து வைத்தல்

அந்த வகையில், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறித்தவ சமயத் தொண்டாற்றுவதற்காக மதுரை வந்து தமது சமயப்பணிக்கு தமிழ் மொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, தமிழ் கற்கத் தொடங்கி தமிழராகவே மாறி, தமிழ் மேதையாக  உருவெடுத்தார்.

“தமிழ் அகராதியின் தந்தை” எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்கள், திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தது, “குட்டி தொல்காப்பியம்” என்று புகழப்படும் தொன்னூல் விளக்கத்தை படைத்தது, இயேசு நாதரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காவியமாக உருவாக்கியது, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை படைத்தது, என தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில்
1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் மார்பளவுச் சிலை திறந்து வைத்தல்

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடலையும், “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” போன்ற வீர வரிகளுக்கு வித்திட்டவர் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள். இவர் 1932ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். தமது தேச பக்திமிக்க பேச்சினால் பல இளைஞர்களை தேசத்தொண்டர்களாக மாற்றினார். மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண் ஆகிய நாவல்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், பிரார்த்தனை கவிதைகள், திருக்குறள் புதிய உரை  போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். 

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவை போற்றிடும் வகையில், 2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டத் தியாகி, உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடல் ஆசிரியர் மற்றும் பத்ம பூஷன் பட்டம் பெற்றவருமான நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு நாமக்கல் நகரில் அன்னாரின் நினைவு இல்லத்தில் மார்பளவுச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, நாமக்கல் நகரில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் திறந்து வைத்தல்

உலகையே தம் வாழிடமாகக் கருதிய பேரன்புப் பெருமகனார்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொற்றொடரைப் பொற்றொடராக உலகிற்கு வழங்கிய சங்கப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் 23.26 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

1974ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 192ஆம் புறநானூற்றுப் பாடலான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பாடல் வரிகள் கல்வெட்டில் பதிக்கச் செய்து மகிபாலன்பட்டியில் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நிறுவப்படவுள்ள 3 திருவுருவச் சிலைகள் மற்றும் ஒரு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டுதல் சுதந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலி திருவுருவச் சிலை

1750-களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள். வேலுநாச்சியாரின் வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தது. வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தார் வீரத்தாய் குயிலி.

                சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாருக்குப் பெருந்துணையாக நின்று தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி அவர்களின் தியாகத்தை போற்றிடும் வகையில், சிவகங்கை வட்டம், இராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்திலேயே
50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள திருவுருவச் சிலை;

சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் திருவுருவச் சிலை

வாளுக்குவேலி அம்பலம்  தென் தமிழகத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவரும், மருது பாண்டியர்களின்  உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலி அம்பலத்தின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின.

வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் “வாளுக்குவேலி அம்பலம்” அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை வட்டம், நகரம்பட்டியில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள திருவுருவச் சிலை;

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவச் சிலை

                மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள திருவுருவச் சிலை;

அண்ணல் காந்தியடிகள் மற்றும் தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அரங்கம்

                சுதந்திரப் போராட்ட காலத்தில் அண்ணல் காந்தியடிகள், பொதுவுடைமை சிந்தனையாளர் தோழர் ஜீவா அவர்களுடன் சந்தித்து பேசிய சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்தில் அச்சந்திப்பின் நினைவாக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அரங்கம்;

                  என மொத்தம் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 3 திருவுருவச் சிலைகள் மற்றும் ஒரு அரங்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப.,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக, சிவகங்கை மாவட்டத்திலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட ஆட்சித் தலைவர் டி.எம்.டி. ஆஷா அஜித், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும்; தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து  மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. லட்சுமிபதி, இ.ஆ.ப., அருட்தந்தை அந்தோணி குருஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும்; நாமக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.