கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்கி வைக்கப்பட்ட இராஜாதோட்டம், ஜமாலியா லேன் மறுகட்டுமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல்
மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று (26.1.2.2023) இராஜாதோட்டம், ஜமாலியா லேன், மீனாம்பாள் சிவராஜ் நகர் மற்றும் குயில்தோட்டம் திட்டப்பகுதிகளில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கடந்த வாரம் 21.12.2023 அன்று மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.
அதனை தொடர்ந்து இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்கி வைக்கப்பட்ட இராஜாதோட்டம் திட்டப்பகுதியில் ரூ. 27.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 162 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் ரூ. 17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 130 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
சென்னையில் மழை வெள்ளத்தால் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் அதிக பணியாளர்களை பணியமர்த்தி, கட்டுமானப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து எழும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சேத்துப்பட்டு- மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் ரூ. 41.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 240 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட குயில் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.65.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 384 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்கள்.
சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 26 இடங்களில் கட்டப்பட்டு வரும் 8723 அடுக்குமாடி குடியிருப்புளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் எனவும், கட்டுமானத்தின் தரத்தினை மூன்றாம் தரப்பு வல்லுநர் குழுக்களைக் கொண்டு ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு மேற்கெண்டு அறிக்கை பெற வேண்டும் என வாரிய பொறியாளர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, வாரிய தலைமைப் பொறியாளர் திரு.வே.சண்முகசுந்தரம், மேற்பார்வை பொறியாளர்கள்(பொ) திரு.இளம்பரிதி, திரு.செந்தாமரை கண்ணன், நிர்வாகப் பொறியாளர்(பொ) திரு.வாஞ்சிநாதன் மற்றும் வாரிய பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.