• Sun. Oct 19th, 2025

சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!

Byமு.மு

Jan 26, 2024
சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO-2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை ( TN BEAT EXPO- 2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (26.01.2024) தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை ( TN BEAT EXPO-2024) சென்னை வர்த்தக மையத்தில் இன்றைய தினம் தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேன்மைபடுத்திட ஏதுவாக இவ்வரசு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், சுயஉதவிக்கான பொருளாதார கடனுதவி திட்டம், துரித மின் இணைப்பு திட்டம் நிலம் வாங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் திட்ட உதவிகள், கல்விக்கடன் திட்டம், மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை தொழில் முனைவோர்களாக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இக்கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட பொருட்களானது 410 அரங்குகளிலும், வணிக நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகங்கள், இரசாயனப்பொருட்கள், மின் மற்றும் மின்னணுவியல், வேளாண்மைக் கருவிகள்,

கட்டுமான தொழில்சார்ந்த உபகரணங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என 187அரங்குகள், அரசு பொதுத்துறையை சார்ந்த பூம்புகார் நிறுவனம், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிட்டேட், சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், ஆவின், போன்ற 28 அரங்குகள் மேலும், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 10 அரங்குகள் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே நேரடி விற்பணையினை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், சுயதொழில் செய்பவர்கள்,

வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்த மாணவர்களையும் இந்நேரத்தில் பாராட்டுகிறேன்.

இக்கண்காட்சியினால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயின தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும், ஒன்றியம் மற்றும் மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களை நேரடி கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளையும், தொழில் முனைவோர் புதிய தொழில் துவங்குவதற்கும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறவும், குறு, சிறு தொழிலாளர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தா. மோ. அன்பரசன் அவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் உ. மதிவாணன் அவர்கள், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்கள், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்

இ. பரதராமன் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் அவர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.கே. கிரி அவர்கள், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயா அவர்கள், ஆதிதிராவிடர்

மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி. க. லட்சுமி பிரியா இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு. கந்தசாமி, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் த. ஆனந்த், இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.