மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (21.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மைச் செய்தியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை இன்று (21.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இம் மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இ.சி.ஜி. முழு இரத்த பரிசோதனை, காசநோய் கண்டறிதல் போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதோடு மட்டுமல்லாது பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இருதய மருத்துவம் என்று பல்வேறு வகையான மருத்துவ ஆலோசனைகளும் இங்கே வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் 250க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பயனடைந்துள்ளனர்.
இச்சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்த பின்னர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கேற்ப பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்களின் மூலம் இப்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மை ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று அனைவருக்கும், அனைத்து தரப்பு பத்திரிகையாளர் பெருமக்களுக்கும் இன்றைக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது.
பிரபல அப்போலோ மருத்துவ நிர்வாகம் இதை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த முகாமில் பங்கேற்கிற அனைவருக்குமே தனித்தனி பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு இங்கே எந்த மாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதோ, அதேபோல் எந்தமாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதோ இவைகள் அனைத்துமே குறிப்பிட்டு, அந்தப் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு அவர்களிடத்திலேயே தரப்பட இருக்கிறது.
தொடர்ச்சியாக, அவர்களுக்கு யாருக்காவது மேல் சிகிச்சை தேவைப்படுமானால், அப்போலோ நிர்வாகமே பொறுப்பேற்று அதை செய்யவும் இருக்கிறார்கள். அதற்கும் மேலே, நம்முடைய காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையிலும், தேவையான சிகிச்சைகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கிறது. அந்த வகையில், இந்த முகாம் என்பது பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, முன் களப்பணியாளர்கள் என்று எடுத்துக்கொண்டால், பத்திரிகையாளர்கள் அதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த வகையில், நடந்து முடிந்த மிக்ஜாம் புயலாக இருந்தாலும், ஏற்கனவே நடந்து முடிந்த பேரிடர் காலங்களில் எதுவாக இருந்தாலும், தங்களுடைய இன்னுயிரையும் துச்சமென மதித்து செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் மிகச்சிறப்பாக தங்களுடைய பணியினை ஆற்றி வருகிறார்கள்.
எனவே, அத்தகைய முன்களப் பணியாளர்களுக்கு சிறிய அளவிலேனும் பாதிப்பு ஏற்பட்டாலும், அதை கண்டறிந்து களைவது என்பது அரசின் கடமை என்பதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி, இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அப்போலோ நிர்வாகத்தைப் பொறுத்தவரை, பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குழு இங்கு அமர்ந்திருக்கிறார்கள். அனைத்து வகையான ரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படவிருக்கிறது. கண் பரிசோதனை, பல் பரிசோதனை போன்றவைகளும் செய்யப்பட இருக்கிறது. மேல் சிகிச்சைகள் எதுவாக இருந்தாலும், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டும் அவைகள் செய்யப்படவும் இருக்கிறது.
அந்த வகையில், இந்த முகாமில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களை சேர்ந்த ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் பங்கேற்று இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கியிருக்கிற இந்த முகாம் என்பது பிற்பகல் 3 மணி வரை நடைபெற இருக்கிறது. எனவே, உங்களுக்கிடையே இருக்கிற மிகப்பெரிய அளவிலான வேலைப் பளுவுக்கிடையேயும், உங்களுடைய உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்கின்ற காரணத்தினால், இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
கேள்வி : திருநெல்வேலியைப் பொறுத்தவரையில் என்ன மாதிரியான முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது? நீங்கள் அங்கு செல்லவிருக்கிறீர்களா?
மாண்புமிகு அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், மிகப்பெரிய அளவிலான மழைப்பொழிவு என்பது மிகக் கனத்த மழை பொழிந்து பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. மழை பொழியத் தொடங்கி தொடங்கிய உடனே. பெரிய அளவில் நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது என்கின்ற அந்த செய்தியை கேள்விப்பட்டவுடனே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தத் துறைக்கு உத்தரவிட்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னார்கள்.
அந்த வகையில், தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை, ஒரு தாழ்வான பகுதியில் இருக்கின்ற காரணத்தினால், உடனடியாக அந்த மருத்துவமனைக்குள் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய உடனே மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. அங்கே பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்கள். உடனடியாக இங்கிருந்து சம்பந்தப்பட்ட மருத்துவ கல்வி இயக்குனர் DME அவர்களை எப்படியேனும் நீங்கள் அங்கே போவதற்கு வழி இல்லை என்றாலும், எப்படியாவது ஜீப் அல்லது எதையாவது ஒரு வாகனத்தைப் பிடித்து அங்கே போக வேண்டும் என்று அவரை அறிவுறுத்தப்பட்டு, அவர் உடனடியாக களத்திற்கு சென்று விட்டார். அவரோடு தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருந்தோம்.
அவர் சென்று அங்கு பார்த்தபோது, உடனடியாக அங்கே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், டீசல் வேண்டும் என்று சொல்லப்பட்டது. டீசலில் இருந்து அதற்கான சாதனங்களை இயக்கினால் மட்டுமே, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களை காப்பாற்றிட முடியும். அவர் உடனடியாக சமயோசிதமாக, IOCL நிர்வாகத்திடம் பேசி, டீசலை துரிதகதியில் வரவழைத்து, அன்றிலிருந்து இன்றுவரை அதை தொடர்ச்சியாக இயக்கிக் கொண்டிருக்கிறார். அதனால், யாருக்கும் எந்த விதமான உயிர் பாதிப்பு என்பது அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இல்லாமல் இருந்தது.
அதேபோல, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை, சிறிய அளவில், ஒரு அடி அளவுக்கு தண்ணீர் தேக்கம் தொடங்கியது. உடனடியாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனைக்கே வந்து அந்த நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அங்கே நோயாளிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் பார்த்துக் கொண்டது.
அதுமட்டுமல்ல, 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மழை நீர் புகுந்து விட்டது. அந்த மழை நீரை எல்லாம் பல்வேறு இடங்களில் மோட்டார்களை கொண்டு இறைக்கும் பணியும், தானாகவே அந்த நீர் வடியும் பணியும் நடைபெற்று இருக்கிறது. நேற்றைக்கு, நம்முடைய துறையின் செயலாளர் அங்கே சென்றிருக்கிறார். நாளை அதிகாலை நான் தூத்துக்குடிக்கு செல்லயிருக்கிறேன். இந்த நிகழ்வு அங்கே தொடங்கியதிலிருந்து அதாவது 17ஆம் தேதியிலிருந்து நேற்று இரவு வரை தொடர்ச்சியாக 190 நடமாடும் மருத்துவ வாகனங்களின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
190 வாகனங்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு உதவியாளர் என்று நான்கு பணியிடங்களோடு அந்த வாகனங்களில் சென்று முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வோரு நாளும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும், 400-க்கும் குறையாமல், இந்த குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியை பொறுத்தவரை, 66 வாகனங்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. திருநெல்வேலியை பொறுத்தவரை, 57 வாகனங்களும், தென்காசியை பொறுத்தவரை, 35 வாகனங்களும், கன்னியாகுமரியை பொறுத்தவரை, 32 வாகனங்களும், ஆக மொத்தம் 190 மருத்துவ வாகனங்கள் இந்தப்பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.
நேற்று இரவு வரை 1489 முகாம்கள் இந்த நான்கு மாவட்டங்களில் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த 1489 முகாம்களிலும், 28 ஆயிரத்து 792 பேர் பல்வேறு பரிசோதனைகளுக்காகவும், நோய் பாதிப்புகளுக்காகவும் வந்திருக்கிறார்கள். இவர்களில் காய்ச்சல் பாதிப்பு என்று கண்டறியப்பட்டோர் 340 பேர், இருமல் மற்றும் சளி உபாதைகள் என்று கண்டறியப்பட்டோர் 572 பேர், இந்த 340 காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கும், 572 சளி மற்றும் இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவரும் சிறப்பாக இருக்கிறார்கள். தொற்று நோய் எதுவும் பரவாமல் தடுக்கின்ற முயற்சியை துறை மிகச் சிறப்பாக ஈடுபட்டு அந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
நான், நாளை காலை சென்று, இரண்டு, மூன்று நாட்கள் இந்த நான்கு மாவட்டங்களிலும் தங்கியிருந்து, தொடர்ந்து இந்த மருத்துவ முகாம்களை இன்னும் கூடுதலாக்குகின்ற பணியையும், ஒரு இயல்பு நிலைக்கு வரும்வரையில், அந்த நோய்த்தொற்றுகளிலிருந்து யாருக்கும் பாதிக்கப்படாத வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, அங்கே முகாம்கள் கூடுதல் ஆக்குவதற்கும், இப்போது DPH, Secretary மற்றும் DME-ம் அங்கே இருக்கிறார்கள், நாளை நானும் அங்கே செல்லவிருக்கிறேன். இந்த நிலையில் இன்னும் மருத்துவக் குழுக்கள் கூடுதலாக தேவைப்பட்டால், நாளை அங்கு சென்றதற்கு பிறகு பல்வேறு அக்கம் பக்கத்தில் இருக்கிற மாவட்டங்களிலிருந்து, மருத்துவக் குழுக்களை அங்கே வரவழைத்து அதற்கான பணிகளில் ஈடுபடுத்த செய்வோம்.
கேள்வி : மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைகள் எல்லா இடங்களிலும் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதில் பத்திரிகையாளர்களுக்கு தனி வாய்ப்பாக முழு உடல் பரிசோதனை செய்ய முன்னுரிமை அளிக்கப்படுமா?
மாண்புமிகு அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்: ஏற்கனவே பத்திரிகையாளர்களுக்கு என்று நம்முடைய காப்பீட்டு திட்டத்தில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே, 72 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு இருந்தது. பத்திரிகையாளர்களுக்கு முழுமையாக வருமான வரம்பே இல்லாமல் காப்பீட்டு திட்டத்தில் செயல்படுத்தப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான். அரசைப் பொறுத்தவரைக்கும், ஏதாவது பிரத்யேகமாக நீங்கள் எது கேட்டாலும் செய்து கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், முன்களப் பணியாளர்கள், எப்படி காவல்துறையினர் இருக்கிறார்களோ, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்களோ, அது போல, பத்திரிகையாளர்களும் முன் களப்பணியாளர்கள்.
இவர்களுடைய உடல் நலனை பேணி பாதுகாப்பது என்பது அரசின் கடமை. எனவே, இதுபோன்ற, முழு உடல் பரிசோதனைகளுக்கு, எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகமாக முன்னுரிமை என்கின்ற வகையில் எதையெல்லாம் செய்ய முடியுமா அதை செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலைப் பெற்று செய்வோம்.
கேள்வி : கேரளாவை பொறுத்தவரைக்கும், கொரோனா அதிகரிப்பதால் நம்முடைய தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்? அது பற்றி
மாண்புமிகு அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்: இந்த கொரோனா தொடங்கியதிலிருந்து அது பல்வேறு வகைகளில் உருமாற்றங்களை தொடர்ச்சியாக பெற்று வருகிறது. சமீப காலமாக, ஒரு ஏழெட்டு மாதங்களாக தமிழ்நாட்டில் ஓர் இலக்கத்தில் அந்த பாதிப்பு இருந்தது. மேலும், RTPCR பரிசோதனைகளின்படியும், அந்த ஓர் இலக்க அளவிலேயே பாதிப்பு இருந்தது. இப்போதுதான் ஈரிலக்க பாதிப்பு 20, 22 என்கின்ற வகையில் வந்து கொண்டிருக்கிறது.
சிங்கப்பூர் போன்ற இடங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருந்தது. NUS என்று சொல்லப்படுகின்ற (National University of Singapore) நிர்வாகத்தில் இருக்கின்ற நிறைய மருத்துவர்களோடு தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மூன்று நாட்கள் அந்த பாதிப்பு பாசிட்டிவாக இருக்கிறது. நாலாவது நாள் அது நெகட்டிவாக மாறுகிறது என்று சொன்னார்கள். இதில் பெரும்பகுதி இருமல், சளி போன்ற மிதமான பாதிப்புகள் தான் இந்த ஒமிக்ரான் என்ற புதிய வகை பாதிப்புகளால் வருகிறது. என்றாலும்கூட, இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தற்போது எங்கெல்லாம் காய்ச்சல் அதிகமாக இருக்கிறதோ, அந்த காய்ச்சல் அதிகமாக இருக்கின்ற இடங்களில் எடுக்கிற மாதிரிகளை எடுத்து RTPCR பரிசோதனைகளை செய்ய சொல்லியிருக்கிறோம். அது போன்று RTPCR பரிசோதனைகள் செய்யப்படும் போது ஒமிக்ரானின் பாதிப்பு என்று இருந்தால், அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட இருக்கிறது..
பொது சுகாதரத்துறையின் சார்பில், கடந்த வாரம் கூட, ஒரு பொதுவான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணைநோய் உள்ளவர்கள், இவர்களெல்லாம் முககவசம் அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்கிறபோது, நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அது செய்வது என்பது அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு செய்தியாளர்களிடத்தில் கூறினார். இந்நிகழ்வில், பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.