• Sun. Oct 19th, 2025

தேசிய இளைஞர் தினம் 2024

Byமு.மு

Jan 11, 2024
தேசிய இளைஞர் தினம் 2024

2024, ஜனவரி 12 அன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்களை ஈடுபடுத்தி தனித்துவமான, விரிவான வகையில் தேசிய இளைஞர் தின நிகழ்வுகளுக்கு இளைஞர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு, தேசிய இளைஞர் தினத்தை இளைஞர் நலத் துறையின் அனைத்து அமைப்புகளும் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடவுள்ளன. நாடு முழுவதும் உள்ள ‘மை பாரத்’ இணையதள தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்) பிரிவுகள், நேரு யுவகேந்திரா (என்.ஒய்.கே.எஸ்) மற்றும் பல கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன், தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றல், இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒருங்கிணைக்கப்படும். 

இந்தக் கொண்டாட்டத்தில் இளைஞர் அமைப்புகள் பாரதத்திற்கான தங்களின் துடிப்பான ஆற்றலை தன்னார்வத்துடன் வெளிப்படுத்தும். உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உறுதி செய்யும் விதமாக நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட இளைஞர் மன்றங்களும் தங்களின் துடிப்புமிக்க ஆற்றலை இந்த விழாவிற்குச் செலவிடும்.

நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் 750 மாவட்டத் தலைநகரங்களில் ஜனவரி 12ஆம் தேதி முதல் ஒரு வார கால சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். தமிழ்நாட்டில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை, போக்குவரத்துக் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் நடத்தப்படும். இந்த நிகழ்வுகளுக்குத் தன்னார்வலர்கள் மை பாரத் டிஜிட்டல் தளம் (https://mybharat.gov.in) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 

பயிற்சி பெற்ற சாலைப் பாதுகாப்பு தன்னார்வலர்கள் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் போக்குவரத்தைக் கையாள உதவி செய்வதற்கும், வீதி நாடகங்கள், வியப்பூட்டும் திடீர் நிகழ்வுகள், பேரணிகள் போன்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்துவதற்கும் பணியமர்த்தப்படுவார்கள். தமிழகத்தில் 7000-க்கும் அதிகமான தொண்டர்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வரும் 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வி.மெய்யநாதன் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். 

மதுரை, கோயம்புத்தூர் நகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 12 அன்று மகாராஷ்டிராவின் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைத்து நாட்டின் இளைஞர்களுக்கு உரையாற்றுவார். 2024 தேசிய இளைஞர் தினத்தன்று, மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகள் சுவாமி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் உரையின் நேரடி திரையிடல் நடைபெறும். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்டங்களின் பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

விழாவையொட்டி, நேரு யுவகேந்திரா சார்பில், மாவட்ட அளவில், ‘எனது பாரதம் – வளர்ச்சியடைந்த பாரதம் Bharat@2047 – இளைஞர்களால், இளைஞர்களுக்காக’ என்ற தலைப்பில், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுவார்கள்.