• Sun. Oct 19th, 2025

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை

Byமு.மு

Feb 13, 2024
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.2.2024) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேசியது கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்”

பேரவைத் தலைவர் அவர்களே,

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னதுபோல சிறு, சிறு பிரச்சினைகள் மட்டுமல்ல, பெரும்பெரும் பிரச்சினைகள் எல்லாம் இருந்தது. அதையும் தீர்த்து வைத்துதான் திறந்து வைத்திருக்கிறோம்.  அவரே சொல்லியிருக்கிறார், இன்னும் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள், நேரிடையாக வாருங்கள், அழைத்துச் செல்கிறோம். நீங்கள் சொல்கின்ற குறைகள் இருந்தால், நாங்கள் தீர்த்து வைக்கக் காத்திருக்கிறோம் என்று பெருந்தன்மையாகச் சொல்லியிருக்கிறார். எனவே, இத்துடன் இந்தப் பிரச்சினையை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீடு

பேரவைத் தலைவர் அவர்களே,

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், தங்கள் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உதயகுமார் அவர்களுக்கு இடம் ஒதுக்கித்தரும் பிரச்சனை குறித்து இந்த அவையிலே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அது சட்டமன்றத்தின் சபாநாயகரின் உரிமையில் உள்ளது என்று பதில் சொல்லி, ஏற்கெனவே இதே அவையில் அவைத் தலைவராக இருந்த தனபால் அவர்கள் என்ன தீர்ப்பு தந்தாரோ, அதை அடிக்கடி நீங்களும் சுட்டிக்காட்டி பதில் சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, நம்முடைய சபாநாயகர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவன செய்யுமாறு தங்களிடம் நான் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.