பொருளடக்கம் | ||
வ. எண் | பொருள் | பக்கம் |
1 | முன்னுரை | 2 |
2 | தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் | 26 |
3 | பேரிடர் மேலாண்மை | 33 |
4 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் | 41 |
5 | TANGEDCO | 46 |
6 | கூடுதல் வரி மற்றும் மேல்வரி (Cess & Surcharges) | 49 |
7 | கடன் உயர்ந்து வருகிறதா? | 54 |
8 | மூலதனச் செலவுகள் | 60 |
9 | வருவாய் வரவினங்கள் | 64 |
வரவு செலவுத் திட்டம் 2024-25. நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் பதிலுரை
முன்னுரை
பேரவைத் தலைவர் அவர்களே,
- 2024-25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு 15 உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அரசுக்கு வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். நம்மாநிலத்தில் திராவிட மாடல் அரசை தலைமையேற்று வழி நடத்தி வரும் நமது தமிழக முதலமைச்சர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் பயணித்து, இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியமான அம்சங்களை மீண்டும் நான் நினைவுகூற விரும்புகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “நாங்கள் கோட்டையிலே அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள குடிசைகளில் வாழும் மக்கள் நலன்
குறித்தே எண்ணிக்கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டதைப் போல இந்த அரசுக்கு என்று ஒரு மாபெரும் தமிழ்க் கனவு ஒன்று உள்ளது. அதன் அம்சங்களை முன்வைத்துத்தான் நாங்கள் இந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளோம். - சமூக நீதி
- கடைக்கோடித் தமிழர் நலன்
- உலகை வெல்லும் இளைய தமிழகம்
- அறிவுசார் பொருளாதாரம்
- மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை
- பசுமைவழிப் பயணம்
- தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்
- நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் அடிப்படையே சமூகநீதிதான் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். அந்த சமூகநீதி தத்துவம்தான் இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் பிரதிபலித்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்நாடு செயல்படுத்தி வரும் மகளிர் நலன் காக்கும் முன்னோடித் திட்டங்களின் முத்தாய்ப்பாக, ஒரு கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்திற்கு 13,720 கோடி ரூபாய் நிதி இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
- நமது முதலமைச்சர் அவர்கள் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் ஒன்று விடியல் பயணத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலமாக இதுவரை 440 கோடி பயணங்கள் மேற்கோள்ளப்பட்டு இருக்கின்றன. இந்தத் திட்டத்திற்காக அரசு இந்த வருடத்திற்கு 3,050 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது என்று சொல்வதைவிட, இந்தத் திட்டத்தினால் பயன்பெறும் பெண்கள் ஒவ்வொருவரும் மாதம் 900 ரூபாய் சேமிக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கெல்லாம் பெருமை. விலைமதிப்பில்லா இந்த 900 ரூபாயின் மதிப்பை நாங்கள் உணர்கிறோம். அதனை பயன்பெறும் பெண்கள் உணர்கிறார்கள், இந்த நாடே உணர்கிறது.
- பெண்களுடைய உயர்கல்வி பெறுவதற்கான
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்திற்காக 370 கோடி ரூபாய் பயன்பெறுவோர் எண்ணிக்கையோ 2,73,000. இதன் மூலம் புதிதாக கல்லூரி சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 34,460. பெண்கள் உயர்கல்வி பெறவேண்டும் என்ற திட்டம் மட்டும் இல்லையென்றால் இத்தனை மாணவிகளின் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்பது கேள்விக்குறியே. - இந்த வருடம் மட்டும் பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு 35,000 கோடி ருபாய் வங்கிக்கடன் வழங்கும் திட்டம், பணி புரியும் மகளிருக்கென்று தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்க தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தோழி விடுதிகள், தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களின் பங்கை இன்னும் அதிகம் உயர்த்துவதற்காக புதிய சலுகைகள் என மகளிர் நலன் காக்க முன்னோடித் திட்டங்கள் பல இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
- அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகமாக்கும் வகையில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டு மூலம்
28,749 மாணவர்கள். அவர்களுடைய முழு கல்வி செலவையும் அரசே ஏற்றுக்கொண்ண 511 கோடி ரூபாய். - புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே அரசு மாணவர்கள் பயன்பெறும் வகையில் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்திற்காக 360 கோடி ரூபாய்.
- அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டில்
பட்ட மேற்படிப்பைத் தொடர உதவித்தொகை என அரசு பள்ளி மாணவர்களை சிகரம் தொட வைக்க பல்வேறு முயற்சிகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்று மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. - கல்வி என்ற அறிவாயுதத்தை வைத்துதான் எதிர்காலத்தை நாம் வென்றெடுக்க முடியும்.
- அந்த அடிப்படையில்தான் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டிட 1,000 கோடி,
- 15,000 திறன் மிகு வகுப்பறைகள் கட்ட 300 கோடி,
- 10 புதிய தொழிற்பயிற்சி நிலையம் Industry 4.0
111 கோடி ரூபாய், - போட்டித் தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி,
- நான் முதல்வன் திட்டத்திற்காக 150 கோடி மற்றும்
- மாணவர்கள் கல்விக் கடன் திட்டத்திற்கு 2500 கோடி என கல்விக்காக, கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.
- தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைந்தும்
2.2 சதவீதம் மட்டுமே இருப்பது ஒன்றிய அரசின்
நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. - அந்த மிகக்குறைந்த வறுமையைக் கூட அறவே ஒழித்திட வறுமையை எதிர்த்து ஒரு இறுதிப்போர் என்ற முழக்கத்தோடு அறிவிக்கப்பட்டதுதான் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்”.
- அரசு நிர்வாகத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள், பொருளியல் வல்லுநர்கள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
- ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் கணவரை இழந்த பெண்கள், தந்தையை இழந்த குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்கள் உண்டு. ஆனால் களநிலவரப்படி, தாயை இழந்த பல குழந்தைகள் கேட்பாரற்று வாழ்ந்து வருவது இன்று தெரிய வருகிறது. எனவே அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த புதிய வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் கொண்ட குடும்பத்தினருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு உதவிகள் எல்லாம் வழங்கப்படும்.
- ‘தொல்குடி’ என்ற புதிய பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில்
1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்திற்காக செயல்படுத்தப்பட்டு இருக்கின்றது. - சமூக நீதியை நிலைநாட்டிட புதிய கைவினைஞர் மேம்பாட்டு திட்டம் எனும் புதிய திட்டம் நம்மால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் கொண்டவர்களுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
உயர் திறன் மையம் அமைக்கப்படும் திட்டம் குறித்த அறிவிப்பு இன்று நாடு முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. - மூன்றாம் பாலினத்தவராக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் கல்லூரி படிப்பை பெற்றோர் மற்றும் உறவினர் ஆதரவின்றி தொடர முடியாத சிக்கல் குறித்து நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்றை
தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது அவர்களுக்கென்று ஒரு திட்டம் வகுத்திட உத்தரவிட்டார். முதல்வரின் ஆலோசனைப்படிதான் மூன்றாம் பாலினத்தவர் கல்லூரி படிப்பு முழுக் கல்வி செலவையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. நாளிதழில் வெளிவந்த ஓர்பெட்டிச் செய்தி கொள்கை முடிவாக மாறும் அதிசயம் இதுதான். தமிழ் சமுகத்தின் கடைக்கோடி தேடிச்சென்று உதவுவதுதான் சமூகநீதி தத்துவத்தின், திராவிட மாடல் அரசின் அடிப்படை கொள்கை. - எதிர்கால தலைமுறையினரை திறமை மிக்கவர்களாக மாற்றும் நோக்கத்துடன் அறிவுசார் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுக்க புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், உலகளாவிய திறன் மையங்கள் என புதிய திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
- எதிர்காலத்தில் வலம் வரப்போகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தமிழர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்து ஆலோசித்து வழிநடத்திட முதலமைச்சர் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
- கோவையில் உருவாகப்போகின்ற மாபெரும் நூலகத்தை வெறும் நூல்கள் மட்டுமல்ல பல ஜி.டி. நாயுடு போன்ற அறிவியல் மேதைகளை உருவாகக்கூடிய அளவில் அறிவியல் அரங்கங்களும் அதில் இடம்பெறும்.
- தமிழ்நாட்டில் துறைகள் தோறும் கணிணிமயமாகும் பணி நடைபெற்று வருகிறது. காவல்துறை, பதிவுத்துறை, பள்ளிக்கல்லூரிகளில் திறன்மிகு வகுப்பறைகள், அரசு அலுவலகங்கள் கணிணிமயமாகி வருகிறது.
- கணித்தமிழ் மாநாடு நடத்தி புதிய மென்பொருள் தொழில்நுட்பம் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவியல் தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் இந்த அரசு பயணித்து வருகிறது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
- தமிழ்நாட்டின் பசுமை வழி பயணத்தை செம்மைப்படுத்திட, பசுமை ஆற்றல் உருவாக்கிடவும் கடற்கரைகளை பாதுகாக்க நெய்தல் மீட்சி இயக்கம், கான்கிரீட் கட்டிடங்கள் இடையே பசுமை பரப்பை உயர்த்திட நகர்ப்புற பசுமை இயக்கம், அடையாறு நதியை சீரமைப்பதற்கு மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நதிக்கரை மேம்பாடு, நீலக்கொடி கடற்கரைகள், மின் பேருந்துகள் என பசுமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
- தமிழ்நாடு எங்கும் கட்டமைப்பு திட்டங்கள் குறித்தான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள், புதிய குடிநீர் திட்டங்கள், வடசென்னை வளர்ச்சிக்கான சிறப்பு நிதி, 3000 புதிய பேருந்துகள் என தொலைநோக்கு திட்டங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன.
- புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்கிட சிப்காட்,
சிட்கோ நிறுவனங்கள் மூலம் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. - ஜவுளித் தொழிலை நவீனமாக்க ஒரு திட்டம் அந்த தொழில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தொழில்நுட்ப ஜவுளி குறித்த ஒரு புதிய கொள்கை.
- பேரவைத்தலைவர் அவர்களே! ஒரு வரலாற்றை ….. இந்த மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ஐரோப்பாவிற்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழிலேதான் வந்தது.
1554ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி போர்ச்சுகல் நாட்டில் லிஸ்பன் நகரத்தில் ”கார்த்தில்லா“ என்ற தலைப்பில்
38 பக்கங்களைக் கொண்ட சிறு தமிழ் நூல் ஒன்று அச்சிடப்பட்டது. - அந்த நூல் அச்சடிக்கப்பட்ட காலத்தில் உலகப்புகழ் பெற்ற ஷேக்ஸ்பியர் பிறந்திருக்கவில்லை. இந்தியாவிலே பேரரசர் அக்பர் அரியணை ஏறியிருக்கவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடுத்து 50 ஆண்டுகள் கூட
ஆகியிருக்கவில்லை. உலக வரலாற்றில் மாபெரும் அறிவியல் மேதைகள் கலிலியோ, நீயூட்டன் இரண்டு பேரும் பிறந்திருக்கவில்லை. இந்த புத்தகம் அச்சிடப்பட்டு 100 ஆண்டுகள் கழித்துதான் உலக அதிசயமான தாஜ்மகால் யமுனை ஆற்றங்கரையில் எழுப்பப்பட்டது. இந்த நூல் வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பின்தான் ரஷ்ய, சீன, ஜப்பான் மொழிகளில் அச்சு நூல் வெளிவந்தது. இந்த வரலாற்றுக் குறிப்பில் முக்கியமான செய்தி உண்டு. இந்த நூல் வெளிவருவதற்கு உதவியாக இருந்தவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் அவர்களது பெயர் வின்சென்ட் நாசரேத், ஜோர்கே கார்வல்லோ, தோமே டி குருஸ். - தமிழுக்கான முதல் அச்சு முதற்கொண்டு அரிய ஆவணங்கள் மின்பதிப்பு செய்திட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நேற்று உலகத் தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தாய்த் தமிழுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் நாம். ஆனால் வேறெந்த மொழியையும் நாம் அழிக்க முற்பட்டதில்லை. எனவேதான் பழங்குடியினர் மொழிகளையும் பாதுகாக்க ஓர் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- இவ்வாறு மாபெரும் தமிழ்க் கனவுகளை முன் வைத்து செதுக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகள் தமிழர்கள் வாழ்வை வளம்பெறச் செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
- ஒன்றிய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழ்நாடு அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது.
- பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் (கிராமம்)
ஒரு அலகின் விலை-1.2 இலட்சம் ரூபாய். இதில், 72,000 ரூபாய் ஒன்றிய அரசின் பங்கு, 48,000 ரூபாய் மாநிலத்தின் பங்கு. - கிராமங்களில் இத்தொகை போதவில்லை என்று தமிழ்நாடு அரசு ‘Additional Roofing Cost’ எனக் கூடுதலாக
1.2 இலட்சம் ரூபாய் வீடொன்றிற்கு வழங்கி வருகிறது. - ஆக மொத்தம், ஒரு வீட்டிற்கு 2.4 இலட்சம் ரூபாயில்,
ஒன்றிய அரசின் பங்கு 72,000 ரூபாய், மாநில அரசின் பங்கு 1,68,000 ரூபாய் : - 30 சதவீதம் மட்டுமே கொடுத்துவிட்டு, திட்டத்திற்குப் பெயர் ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா‘ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
- நாட்டிலேயே முதன்முறையாக, ஆதி திராவிடர்களுக்கு கான்க்ரீட் வீடு வழங்கியது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். அதுமட்டுமல்ல, 1970ஆம் ஆண்டில் முதன்முறையாக குடிசைமாற்று வாரியத்தை அமைத்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். 14 வருடங்கள் கழித்து தந்தையின் கனவை இன்று மகன் நிறைவேற்றுகிறார். நமது முதலமைச்சர் அவர்கள் இன்று குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- ஒன்றிய அரசால் வழங்கப்படும் தொகை போதாது என்றுதான், ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, ’கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், வீடு ஒன்றிற்கு 3.5 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க
தமிழ்நாடு அரசு நிதியிலிருந்தே செயல்படுத்தப்படும். - இது மட்டுமன்றி, அரசு ஏற்கெனவே கட்டித்தந்த 2.5 இலட்சம் பழைய வீடுகளைப் பராமரிப்பதற்காக 2,000 கோடி ரூபாய் நிதியை அறிவித்துள்ளது.
- பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கு (நகர்ப்புரம்) ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.5 இலட்சம். ஆனால், மாநில அரசின் பங்கோ 7 இலட்சம்.
- முதல்வரின் கிராமசாலை திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளதாக தவறாக கூறினார்கள். இத்திட்டம் முழுவதையும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து தான் செயல்படுத்தி வருகிறது. ஆனால், மறுபுறம், பிரதமரின் கிராமசாலை திட்டத்திற்கு,
1,945 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இன்றுவரை ஒப்புதல் பெறப்படவில்லை. - மேலும், ஊட்டச்சத்தை உறுதி செய், மாதிரி பள்ளிகள் ஆகிய திட்டங்களை மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து செயல்படுத்தி வருகிறது.
- ஒன்றிய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலைஉணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை. முதலமைச்சர் அவர்கள், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாட்டிற்கே முன்னோடியாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்தான், பின்னர் நாடு முழுவதும் பின்பற்றப்படும். நாட்டையும் பிற மாநிலங்களையும் வழிநடத்திச் செல்லும் நலத்திட்டங்களை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- மக்களின் நலனிற்காக, இந்த திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை ஒன்றிய அரசு நாடு முழுவதும் விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
பேரிடர் மேலாண்மை
மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பினை சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில் சந்திக்க நேரிட்டது. இப்பாதிப்புக்கான சீரமைப்பதற்காக ஒன்றிய அரசிடம் 19,689 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரும் பாதிப்பினை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும்
கன்னியாகுமரி மாவட்டங்கள் எதிர்கொண்டது. இதனால்,
18,214 கோடி ரூபாயாக ஒன்றிய அரசிடம் தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பேரிடர் நிகழ்கிறதோ இல்லையோ, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆண்டுதோறும் விடுவிக்கப்படும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வழங்கிவிட்டு, ஏதோ பெரிய உதவியை வழங்கியதுபோல் ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் பெருமை கூறினார்கள். மேலும், பல்வேறு குழுவினர் வந்தபோதிலும், எந்த ஒரு நிதியையும் இன்றுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்த பாரபட்சமா என்று பார்த்தால்
ஆண்டு | மாநிலம் | பேரிடர் | ரூபாய் கோடியில் |
2023 | குஜராத் | பிபர்ஜாய் புயல் | 338 |
2022 | அசாம் | வெள்ளம் | 250 |
2022 | கர்நாடகா | வெள்ளம் | 939 |
2021 | குஜராத் | புயல் | 1000 |
2021 | மத்தியப் பிரதேசம் | வெள்ளம் | 600 |
2021 | பீகார் | வெள்ளம் | 1038 |
2021 | கர்நாடகா | வெள்ளம் | 1623 |
அரசியல்ரீதியாகச் செயல்படும் ஒன்றிய அரசினால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான்! மக்களை வாக்குகளாகப் பார்க்கும் பாஜக விற்கு மக்களின் துயரத்தை எவ்வாறு அறிய இயலும்.
ஒன்றிய அரசு எந்த ஒரு நிதியையும் வழங்காத நிலையில் இந்த அரசு தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
- மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் என
1,486 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. - தென் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் என மொத்தம் 30.94 இலட்சம் குடும்பங்களுக்கு
541 கோடி ரூபாய் செலவில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. - சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுது பார்த்தல் 385 கோடி ரூபாய்.
- பயிர் சேத நிவாரணம் 250 கோடி ரூபாய்
- தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பிற்காக நெடுஞ்சாலை துறைக்கு 725 கோடி ரூபாய்
- நீர்வளத் துறையில் சீரமைப்பு பணிகளுக்காக
630 கோடி ரூபாய் - நிவாரண இழப்பீடாக பல்வேறு துறைகளுக்கு தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- சிறு வணிகர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை சிறப்புக் கடன் திட்டம்
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மூன்று லட்சம் ரூபாய் வரை வெள்ள நிவாரண கடனுதவித் திட்டம்
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 350 கோடி ரூபாய் கடன்
- நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு
- சேதம் அடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம்
15 கோடி ரூபாய் - கால்நடைகள் வாங்குவதற்கு கடன்
- உப்பள தொழிலாளர்களுக்கு உதவித்தொகை 3,000 ரூபாய்
- பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் பாட புத்தகங்கள் வழங்குதல்மற்றும் இதர அரசு துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் வழங்குதல்
- இந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் அவர்கள் தூத்துக்குடிக்கு வருகைதர உள்ளார். அதற்கு முன்பாவது, தேசியப் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவார் என்று நம்புகிறோம்.
- விண்வெளிச் சாதனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் அவர்கள், சமவெளியில் நடந்த துயரத்திற்கு நிவாரணம் அளிப்பாரா என்று எதிர்நோக்குகிறோம்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம்
- 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம், நம் நாட்டிலேயே ஒரு மாபெரும் கட்டமைப்புத் திட்டமாகும்.
- ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு தனது பங்களிப்பை வழங்கும். சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டத்திற்கு அவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது.அவ்வாறே, சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திற்கு தனது பங்களிப்பாக 50% ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்பிக்கையில்தான், இத்திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஒன்றிய உள்துறை அமைச்சரும், சென்னைக்கு வருகை புரிந்து, எதிர்க்கட்சித் தலைவருடன் கைகுலுக்கி, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியின் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து பணிகளைத் தொடங்கினார்கள். சற்றுத் தாமதாகவே அவர்கள் கண் திறந்திருக்கிறது. சற்று முன்பே திறந்திருந்தால், மாநிலத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை சேமித்திருக்கலாம்.
- அதற்குப் பின், 17.8.2021 அன்று திட்ட முதலீட்டு வாரியம் (PIB) ஒப்புதல் அளித்தது. ஆனால், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், இத்திட்டத்தின் மொத்தச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது.
- நமக்கு ஒப்புதல் அளிக்காத அதேவேளையில்,
ஒன்றிய அரசு: - 2022 இல் நாக்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டம், கொச்சி மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- 2023 இல் குருகிராம், புனே மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த நியாயமற்ற செயலினால், மாநில அரசிற்கு
இந்த வருடம் 9,000 கோடி ரூபாயும் அடுத்த வருடம்
12,000 கோடி ரூபாயும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
- ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்றாததால், மாநில அரசின் பற்றாக்குறையும், கடனும் அதிகரித்துள்ளது.
- ஒன்றிய அரசு விரைவில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்கு, சமீபத்தில் மனம் மாறிய நமது எதிர்கட்சித் தலைவர் குரல் கொடுப்பார் என்றும், நமது கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் உதவுவார் என்றும் நம்புகின்றேன்.
- இந்த நியாயமற்ற செயலினால், மாநில அரசிற்கு
TANGEDCO
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் TANGEDCOவிற்கான இழப்பீட்டு நிதியினைப் பற்றி எழுப்பிய முக்கியமான கேள்விக்கு, இம்மாமன்றத்தில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவாக விளக்க விரும்புகிறேன்.
- நான் வரவு செலவுத் திட்டத்தில் கூறியதுபோல,
ஒன்றிய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. - அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, ஒன்றிய அரசு வகுத்துள்ள கணக்கீட்டிற்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும்.
- இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம்.
- இதனால்தான், அதிகளவில் இழப்பீட்டுத் தொகையை TANGEDCOவிற்கு வழங்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனினும், மாநில அரசு இத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
- TANGEDCO நிறுவன அமைப்பை மாற்றியமைத்தல் (unbundling). இதனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் தனிக் கவனம் செலுத்த இயலும்.
- அதிக வட்டியுள்ள கடனை குறைந்த வட்டிக் கடனாக மாற்றுதல்.
- பசுமை ஆற்றலின்மீது சிறப்புக் கவனம் செலுத்த ஒரு புதிய நிறுவனம் அமைத்துள்ளது.
கூடுதல் வரி மற்றும் மேல்வரி (Cess & Surcharges)
- “எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் ஒன்றியத்திற்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா?”
- இவ்வாறு, மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர்
வேறு யாரும் இல்லை. 2012 ஆம் ஆண்டில் குஜாரத்
மாநில முதலமைச்சர், இன்றைய இந்திய பிரதமர்
நரேந்திர மோடி அவர்கள் தான். - குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் கேட்கிறோம்.
- ஒன்றிய அரசு தனது வரிகளை மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. 10வது நிதிக்குழுவில்
6.64 % என்று நமது பங்கை தொடர்ந்து குறைத்து,
15 வது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாகக் குறைத்துள்ளது. தொடர்ந்து வரும் நிதிக்குழு நமது மாநிலத்திற்கு அநீதியை அளிக்கின்றன. - இது போதாதென்று, ஒன்றிய அரசு தனது வரிகள் மீது மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை, அதாவது
Cess and Surcharges, விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இத்தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு இத்தொகையை தானே வைத்து கொண்டு திட்டங்களை தீட்டுகிறது. - 2021-22 இல் cess & surcharge மூலம் ஒன்றிய அரசு
5.85 இலட்சம் கோடி ரூபாயை திரட்டியது. - 2022-23 இல் 6.19 இலட்சம் கோடி ரூபாய், 2023-24 இல்
6.5 இலட்சம் கோடி ரூபாய் மற்றும் 2024-25 இல்
6.95 இலட்சம் கோடி ரூபாய். - ஒரு கற்பனைக்கு, ஒருவேளை ஒன்றிய அரசு, கூட்டாட்சித் தத்துவத்தை கடைபிடித்து இத்தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், தமிழ்நாட்டிற்கு
- 2021-22 இல் 9,000 கோடி ரூபாய், 2022-23 இல்
10,300 கோடி ரூபாய், 2023-24 இல் 10,900 கோடி ரூபாய்
மற்றும் 2024-25 இல் 11,600 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். - இந்த அளவிற்கு, மாநில அரசின் பற்றாக்குறை, கடன்சுமை குறைந்திருக்கும்.
- இது தமிழ்நாட்டைச் சார்ந்த பிரச்சனை மட்டும் இல்லை.
இது அனைத்து மாநிலங்களைச் சார்ந்த பிரச்சனை.
மாநில அரசுகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் நாட்டிற்கே முன்னோடியாக திகழும் கழக அரசு,
ஒன்றிய அரசு இந்த நியாயமற்ற முறையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.
கடன் உயர்ந்து வருகிறதா?
பொருளாதாரத்தைப் பற்றியும் நிதி மேலாண்மை பற்றியும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல், பரபரப்பை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் அரசின் கடன் அளவைப் பற்றி தவறான கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
எந்த ஒரு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போதும், அந்தகாலகட்டத்திற்கு ஏற்ப அதைப் பார்க்க வேண்டும். நாங்கள் 10 ஆண்டுகாலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நீங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளீர்கள் என்று கூறுவது தவறு. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், 2011 இல் வரவு செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு 1.02 இலட்சம் கோடி ரூபாய்தான்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.51 இலட்சம் கோடி ரூபாய் தான். இன்று, வரவு செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு
4.12 இலட்சம் கோடி ரூபாய் அளவும்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 31.55 இலட்சம் கோடி ரூபாய் அளவும் உள்ளன.
இந்த அடிப்படையைக் கொண்டு, கடனைப் பொறுத்தவரை, அதை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட வேண்டும். அதாவது, மாநிலத்தின் பொருளாதாரம் வளர வளர, அதன் கடன் வாங்கும் திறனும் , அதை திருப்பிச் செலுத்தும் திறனும் அதிகரிக்கும். அந்த வகையில்,
15 வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு, கடன் அளவு குறித்த சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதன் படி,
ஆண்டு | 15 வது நிதிக்குழுவின் வரம்பு | மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் கடன் விகிதம் |
2021-22 | 28.7 | 27.01 |
2022-23 | 29.3 | 26.87 |
2023-24 | 29.1 | 26.72 |
2024-25 | 28.9 | 26.40 |
நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
மேலும், இங்கே இரண்டு முக்கிய விவரங்களைக் கூற கடமைப் பட்டிருக்கிறேன்:
1. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம்கட்டத்திற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்காததால், இந்த ஆண்டு
9,000 கோடி ரூபாய் கடனும், அடுத்த ஆண்டு 12,000 கோடி ரூபாய் கடனும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
2. இது போதாது என்று, மாநில அரசின் நிதிநிலையை மேலும் பாதிக்கும் வகையில் கடுமையான நிபந்தனைகளை விதித்து, வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களைத் திரட்டும் மாநில அரசின் அதிகாரத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது.
3. இவ்வாறு ஒரு நிபந்தனையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பீட்டு நிதியாக இந்த ஆண்டு 17,117 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு
14,442 கோடி ரூபாயும் மாநில அரசு வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவ்வாறு வழங்காவிட்டால், அதற்கு இணையான தொகை நமது கடன் வரம்பிலிருந்து கழிக்கப்படும்.
ஒன்றிய அரசு இவ்வாறு நம் நிதிநிலையைப் பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தாலே, நமது கடன் இந்த ஆண்டு சுமார் 26,117 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு
26,442 கோடி ரூபாய் அளவிற்கும் குறைந்திருக்கும்.
மூலதனச் செலவுகள்
- கடந்த ஆட்சிக்காலத்தில் மூலதனச் செலவிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றது. 2011-12 ஆம் ஆண்டில் 16,336 கோடி ரூபாயாக இருந்ததை 2020-21 ஆம் ஆண்டில் 33,068 கோடி ரூபாயாக உள்ளது.
- நீங்கள் 10 வருடம் ஆட்சிசெய்த காலத்தில் மூலதனச் செலவிற்காக 16,732 கோடி ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளீர்கள். ஆனால், நாங்கள் கடும் நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில்கூட, மாநிலத்தின் வளர்ச்சியை ஈட்டும் மூலதனச் செலவிற்காக கடந்த மூன்று வருடத்திலேயே 33,068 கோடி ரூபாயாக இருந்ததை, 12,000 கோடி ரூபாயில் சென்னை மெட்ரோ உட்பட 59,681 கோடி ரூபாயாக உயர்த்தி, பணிகள் மேற்கொண்டு வருகிறோம். வெறும் 3 ஆண்டுகளில், நாங்கள் மூலதனச் செலவினத்தை 26,613 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளோம்.
- மூன்றே வருடத்தில் 26,613 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளோம். நீங்கள் மூலதனச் செலவிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கடந்து சென்ற வருடத்திற்கும் சேர்த்து, வரும்காலத்தில் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவிற்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்து, நம் மாநிலத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வோம்.
- தற்போது, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மற்றும் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை போன்ற மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில் திட்டங்கள், நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், மொத்தமாக 9,535 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சாலை மற்றும் பாலங்கள் மேம்பாட்டிற்காக
17,890 கோடி ரூபாய், போக்குவரத்துத் துறைக்கு
2,966 கோடி ரூபாய் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
வருவாய் வரவினங்கள்
- இந்த ஆண்டு, தொடர்ச்சியாக இரண்டு பேரிடர்களைச் சந்தித்ததால், 20.61 சதவீதம் என எதிர்பார்த்த வருவாய் வளர்ச்சி 13.26 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரி வருவாயின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- மாநில சரக்கு மற்றும் சேவை வரியில் அதிகளவிலான வளர்ச்சியை தமிழ்நாடு தொடர்ந்து அடைகிறது. ஆனால், ஆய்வு செய்த்தில், மாநிலத்தில் வழங்கப்படும் இணையவழி சேவைகளுக்கான (Digital Services) வரி மாநிலத்திற்கு கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் ஒரு நிறுவனம் வழங்கிய சேவைக்கு, வரி ஹரியானா மாநிலத்திற்கு செலுத்தப்படுகிறது. ஏனென்றால், சேவை தமிழ்நாட்டில் பெற்ற போதிலும், அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாநிலம்தான் IGST பெற்று வருகிறது என்பதை அறிந்துள்ளோம். இதனால், பொருளாதாரம் அதிக வளர்ச்சி அடைந்தாலும், அதற்கேற்ப வரி கிடைப்பதில்லை.
- இதனை, பகுப்பாய்வு செய்வதற்காக Economic Advisory Council உறுப்பினர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இப்பிரச்சனையை GST குழுவில், இதுகுறித்து விரைவில் விவாதிக்க நமது அரசு முயலும்.
மேலும், பல்வேறு சீர்திருத்தங்களை வரி வருவாய் திரட்டும் துறையில் எடுத்து வருகிறது.
- IIT-ஹைதராபாத் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 3.0 இணையசேவை பதிவுத் துறையில் செயல்படுத்த உள்ளோம்.
- சுரங்கத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் அளவினை கணக்கிடுவதை மேற்கொண்டுள்ளோம்.
- Seigniorage கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.
- மோட்டார் வாகன வரியும் திருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் நிதியாண்டில் வரி வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..