• Sun. Oct 19th, 2025

“மக்களவைத்தேர்தல் – தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!.

Byமு.மு

Mar 16, 2024
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  இதற்காக விக்யான் பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்,  தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்,  எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது :

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது.  தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான்.  2 ஆண்டுகளாக இந்த தேர்தலுக்கு தயாராகியுள்ளோம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,  மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையிலும் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இதுவரை 800 மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக பேசி உள்ளேன். ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களுக்கு வசதியாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.  1.82 கோடி முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.  சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.  மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர்,  பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் உடலில் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதையடுத்து, புதுச்சேரிக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு

  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 20
  • வேட்புமனுத் தாக்கல் கடைசி: மார்ச் 27
  • வேட்புமனு பரிசீலனை: மார்ச் 28
  • திரும்பப்பெற கடைசி நாள்: மார்ச் 30
  • வாக்குப்பதிவு: ஏப்ரல் 19
  • வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4 ஆம் தேதி