தமிழ்நாடு அமைச்சரவையில், அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன் மூலம் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் பாதுகாத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடியை குற்றவாளி என்று அறிவித்து தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து மேல் முறையீட்டுக்கு 30 நாட்கள் அவகாசமும் அந்த நீதிமன்றம் அளித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரினார். இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் பொன்முடி அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. எனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்என்ரவிக்கு பரிந்துரை அளித்திருந்தது.
இதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடி குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக சாடியிருந்தது. ஆளுநர் இப்படி நடந்துகொள்ளலாமா என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை அமல்படுத்தாமல் ஆளுநர் என்ன செய்தார் உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், ஆளுநருக்கு ஒருநாள் அவகாசம் அவகாசம் வழங்கினர்.
இந்நிலையில் அமைச்சராக பொன்முடியை மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று காலை முதல் எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், மறுப்பதற்கு வேறு வழியின்றி ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார். பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், முதலமைச்சர், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, முனைவர் க.பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று (22.3.2024) பிற்பகல் 3.30 மணிக்கு முனைவர் க.பொன்முடிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பிற்பகல் 3.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அமைச்சராக பதவியேற்பதற்காக பொன்முடி மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடன் வந்தனர். மேலும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். பதவியேற்பு நிகழ்ச்சியின் போது முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் ஒலிக்கப்பட்டன. பின்னர், அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.
உச்சநீதிமன்றத்துக்கு முதல்வர் நன்றி
பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பொன்முடி விவகாரத்தில் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் பாதுகாத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பின் மூலம் அரசியல் சாசன உணர்வை உச்சநீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம் சீர்குலைந்து வருகிறது என்றும், ஜனநாயகத்தை பாதுகாக்க 2024 தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், புகழ்பெற்ற நமது தேசத்தை அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாக பாடுபடுவோம் எனவும் சூளுரைத்துள்ளார்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்ற தருணம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று தெரிவித்தார். மாநிலத்தின் ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதை தட்டிக் கேட்க யாருமில்லை என்று இருந்த நிலையில் அதற்கு பதலடி கொடுக்கும் வகையில் இந்த நிகழ்வு அரங்கேறியதாக குறிப்பிட்டார். ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் ஆட்சி காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது பிரதமர் மோடி அரசுக்கு முதல் அடி, இது பாஜக அரசுக்கு மிகப் பெரும் அடியாக விழப்போகிறது. மேலும், இந்த நிகழ்வு இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும். முதல் வெற்றியோடு மக்களவைத் தேர்தல் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.