போக்குவரத்து தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கையை ஏற்று தமிழக மக்கள் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட விடியா திமுக அரசை வலியுறுத்தல் !
விடியா திமுக அரசு, தனது வீராப்பு காரணமாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத காரணத்தால், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில், உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என்று வெளியூர்களில் வேலை செய்துவரும் லட்சக்கணக்கான தமிழர்கள் தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சருடனான அனைத்துத் தொழிற்சங்கங்களின் இன்றைய பேச்சுவார்த்தையில், தங்களது நியாயமான 6 கோரிக்கைகளில் ‘ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு 70 கோடி ரூபாய் மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக்கொள்ளலாம் என்றும், இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த நிலையில், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொங்கலுக்கு அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாமலும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ளாமலும், யாருக்காக செயல்படுகிறது என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.