• Sun. Oct 19th, 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் சசிகலா பாராட்டு.

Byமு.மு

Jan 6, 2024
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் சசிகலா பாராட்டு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்றைக்கு சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக நம் இந்திய தேசம் அனுப்பிய முதல் விண்கலம் என்ற பெருமையை ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, 126 நாட்கள் பயணித்து, 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவை கடந்து இன்றைக்கு சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு இமாலய வெற்றியை நம் தேசம் அடைந்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. சூரியனை ஆய்வு செய்த அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் இன்றைக்கு நம் இந்திய தேசமும் இடம்பெற்று இருப்பது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள ஆதித்யா எல்-1 திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியும், ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குனருமான தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் சாஜி அவர்களுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.