மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவிப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (10.01.2024) ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 நபர்களுக்கு ரூ.1,000/- க்கான காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு ஒரேமுறையாக மூத்த குடிமக்கள் தரிசனம் செய்திடும் வகையில் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
2023 – 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 249 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம். அதில் 40 ஆவது அறிவிப்பான திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கப்படும் என அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இன்றைய தினம் ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டம் தொடங்கி வைத்து, ரூ.1,000/- க்கான காசோலையினை வழங்கினோம்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற 58 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்திருக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வராக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் என்ற வகையில் நானும் 304 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுகிறார்கள் என்பதனை கருத்தில் கொண்டு, இந்த ஆறு திருக்கோயில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 நபர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட இந்து சமய அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகின்ற 28.01.2024 அன்று தொடங்க இருக்கின்றது.
இதற்கான விண்ணப்பத்தினை நாளை (11.01.2024) முதல் துறையில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், ஏற்கனவே மானசரோவர், முக்திநாத் மற்றும் இராமேசுவரம் – காசி ஆன்மிக பயணங்கள் செயல்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்திற்கு இந்தாண்டு 300 நபர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சத்தை மானியமாக வழங்கியுள்ளது.
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச விழாவினை சிறப்பாக நடத்திட ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பணிசுமை அதிகம் இல்லாத திருக்கோயில்களின் அலுவலர்கள் சிறப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, பழனியில் தைப்பூசத்திற்கு 10 நாட்களுக்கு நாள்தோறும் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அறுபடை வீடு திருக்கோயில்களிலும் தைப்பூசத்திற்கு சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
இந்நிகழ்ச்சிகளில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், இ.ஆ.ப., பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் சீர்வளர்சீர் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சீர்வளர்சீர் சிவஞானபாலய தேசிகர், உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் மு.பெ.சக்தியவேல் முருகனார், திருமதி தேச மங்கையர்க்கரசி, ராமசுப்பிரமணி, திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.