நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் செய்தியாளராக சகோதரர் நேசபிரபு பணியாற்றி வந்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானக்கடையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் பல்லடம் உணவகம் ஒன்றில் சிறப்பு பிரிவு காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சகோதரர் நேசபிரபு, நேற்று வழக்கம்போல் செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, நேசபிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது.
வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
இந்நிகழ்விற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே, பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை காவல்துறை அலட்சியமாக கையாண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
எனவே, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதோடு, எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் நேச பிரபுக்கு உயர்தர மருத்துவச் சிகிக்சை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அதே நேரத்தில், மெத்தனப்போக்குடன் செயல்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. மேலும், நேச பிரபுக்கு பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேச பிரபு விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலை கூறிக்கொள்கிறேன்.