மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில்
ரூ.62.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள
உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கமான
“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.1.2024) மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து, ஏறுதழுவுதல் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்ச் சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழாவின்போது, தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திடும் வகையில் “அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ் 21.4.2022 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில் ஏறுதழுவுதல் போட்டிகளுக்கென ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தினைக் கட்டுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கென 62 கோடியே 78 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக, நவீன வசதிகளுடன் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்:
வாடிவாசல்
வாடிவாசல் வழியாக காளைகள் அடக்கி பிடிக்கும் பகுதிக்கு விடப்படுகின்றன. இங்கு காளைகள் மற்றும் விளையாட்டு அமைப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 மீட்டர் நீளமுள்ள வாடிவாசலின் சுவற்றில் ஜல்லிக்கட்டின் சிறப்பினை விளக்கிடும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன,
5000 பார்வையாளர்கள் அமரும் மூன்றடுக்கு மாடம்
இந்த அரங்கில், அரை வட்டவடிவிலான இருக்கை கொண்ட மூன்றடுக்கு பார்வையளர் மாடங்கள், தரைமட்ட அளவிலான இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 50 நபர்கள் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட பார்வையாளர் மாடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
காளைகள் காத்திருப்பு மற்றும் தயார்நிலை கூடம்
வாடிவாசல் நுழையும் முன் காளைகள் காத்திருப்பதற்காக இப்பகுதி பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் ஒரே நேரத்தில் 300 காளைகள் காத்திருக்கும் வகையில் 10,850 சதுர அடி பரப்பளவில் தேவையான தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது,
காயமடைந்த காளைகளுக்கு சிகிச்சை அளித்திட கால்நடை மருந்தகம்
காயமடைந்த காளைகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில் 1676 சதுர அடி பரப்பளவில் கால்நடை மருந்தகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்திட துணை சுகாதார நிலையம்
காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் 853 சதுர அடி பரப்பளவில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏறுதழுவுதல் போட்டி நடைபெறும்போது அவசர மருத்துவ உதவிக்காக 10 அவசரகால ஊர்திகள் இம்மையத்தின் அருகிலேயே நிறுத்தி வைக்கப்படும்.
அருங்காட்சியகம்-1
சிந்து சமவெளி நாகரிகம் முதல் சமகாலம் வரை காளைகள் மற்றும் காளை விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் 3,390 சதுர அடி பரப்பளவிலான குளிருட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், பண்டைய சங்க கால இலக்கியங்களில் நடந்த காளைகள் மற்றும் காளை விளையாட்டுகள் தொடர்பான சிற்பங்கள், சுவரோவியங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கல்வெட்டுகளின் பிரதிகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் நிறைந்துள்ளன.
அருங்காட்சியகம்-2, நூலகம் மற்றும் ஒலி ஒளி காட்சிக்கூடம்
காளைகள் மற்றும் காளை வளர்ப்பவர்களின் உணர்வுபூர்வமான பந்தத்தை பறைசாற்றும் வகையில் 3,821 சதுர அடி பரப்பளவில் ஒரு குளிருட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைப் பின்னணியுடன் காளை ரைடருடன் (Bull Rider) குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு தனிப் பகுதியும், காளை / மாடுபிடி விளையாட்டுகளைப் பற்றிய புத்தகங்கள் மற்றும் பிற இலக்கிய ஆதாரங்களின் நகல்களின் விரிவான தொகுப்புகளுடன் ஒரு பிரத்யேக நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரிய பனை ஓலைக் கல்வெட்டுப் பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காளை விளையாட்டுகள் பற்றிய காட்சிப்படத்தை காண 100 பேர் அமரக்கூடிய ஒலி ஒளி காட்சிக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், முக்கிய பிரமுகர்கள் மாடம், ஓய்வறைகள், நிர்வாக அலுவலகம், ஊடகவியலாளர்கள் கூடம், தற்காலிக விற்பனை கூடம், கழிவறைகள், பொருட்கள் வைப்பறை, மாடுபிடி வீரர்கள் தங்கும் மற்றும் உடை மாற்றும் அறை, மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும், பிரதான முகப்பு நுழைவு வாயில், உட்புற தார்சாலை வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, புல் தரை, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை மற்றும் தரைதள நீர்தேக்க தொட்டிகள், இரண்டு
ஆழ்குழாய் கிணறுகள், காளைகள் உரிமையாளர்கள் ஓய்விடம், தற்காலிக விற்பனை கூடம், 85,000 சதுர அடிபரப்பளவில் இயற்கையை பிரதிபலிக்கும் வண்ணம் பலவகையான வண்ணங்களுடன் கூடிய செடிகள் கொண்ட தோட்டம் என பல்வேறு வசதிகளுடன் பொதுப்பணித்துறையின் மூலம் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கமான கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்திறந்து வைத்து, அங்கு நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் ஏறுதழுவுதல் சிலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏறுதழுவுதல் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து, பார்வையிட்டார். ஏறுதழுவுதல் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார்.
இத்திறப்பு விழாவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர்
எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்
என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், முருகேசன், திருமதி.தமிழரசி, அப்துல் வகாப், காந்திராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர்
த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எம்.எஸ். சங்கீதா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.