24766 மறுகட்டுமான திட்டப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையான 594 கோடியே 54 இலட்சம் ரூபாயை தாய் உள்ளத்தோடு முதலமைச்சர் அவர்களின் அரசே ஏற்றுள்ளது – புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தகவல்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று (4.2.2024) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் , ஜோகித் தோட்டம் ஆகிய திட்டப்பகுதிகளில் ரூ.146.19 கோடி மதிப்பீட்டில் 1046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி பேசுகையில் தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தல்
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதி 1970 ஆம் ஆண்டு 270 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 568 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 410 சதுர அடி கொண்ட வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதியில் 3 கட்டிட தொகுப்புகள் தூண் மற்றும் 9 தளங்களுடன், 1 கட்டிட தொகுப்பு தூண் மற்றும் 11 தளங்களுடன் 87 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் 630 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
ஜோகித் தோட்டம் திட்டப்பகுதி 1982 ஆம் ஆண்டு 230 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 256 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 58 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 417 சதுர அடி கொண்ட ஜோகித் தோட்டம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 13 தளங்களுடன் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினம் திறக்கப்பட்ட திட்டப்பகுதிகளில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு , தெரு விளக்குகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 திட்டப்பகுதிகளும் சேர்த்து மொத்தம் 146 கோடியே 19இலட்சம் ரூபாய் செலவில் 1046 குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது.
இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 72 திட்டப்பகுதிகளில் 2544.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 23259 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மறுகட்டுமான திட்ட பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.5 இலட்சம் முதல் 6 இலட்சமாக இருந்தது. மறுகட்டுமான திட்ட பயனாளிகளின் சிரமத்தை அறிந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தாய் உள்ளத்தோடு பரிசீலித்து அவர்களது பங்களிப்பு தொகையை குறைக்க வேண்டும் என்பதற்காக மறுகட்டுமான திட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலை வசதிகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், பொது வசதி கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்படும் செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். இவ்வறிப்பினால் பயனாளிகள் பங்களிப்பு தொகை சுமார் ரூ4 இலட்சம் குறைக்கப்பட்டு தற்போது ரூ1.50 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2.5 ஆண்டுகளில் 24766 குடும்பங்கள் செலுத்த வேண்டிய பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.594 கோடியே 54 இலட்சம் அரசே ஏற்றுள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சு.பிரபாகர்,இ.ஆ.ப., இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர் திருமதி.கீதா முரளி, வாரிய தலைமை பொறியாளர்கள் வே.சண்முகசுந்தரம், அ.மைக்கேல் ஜார்ஜ், மேற்பார்வை பொறியாளர்கள் (பொ) சிவசங்கரன், செந்தாமரை கண்ணன் , நிர்வாகப் பொறியாளர் சுந்தர், மற்றும் வாரிய பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.