• Tue. Oct 21st, 2025

30 ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் முதலமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு!.

Byமு.மு

Feb 7, 2024
30 ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் முதலமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சிகளில் 5,257 பயனாளிகளுக்கு ரூ.75.37 கோடி மதிப்பீட்டில் பட்டாக்கள் ! 30 ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டு !

பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் சில கிராமக் கணக்குகளில் பதிவு செய்யப்படால் விடுபட்டுள்ள விவரங்கள் அரசின் கவனத்திற்கு அண்மையில் தெரியவந்துள்ளது. இவற்றின் மீது உரிய திருத்தங்கள் செய்து பட்டா வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்த 5,288 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கடந்த 28.11.2023 அன்று 3,008 பயனாளிகளுக்கு 56 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2,249 பயனாளிகளுக்கு 18 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் 30.1.2024 அன்று வழங்கப்பட்டது. ஆக மொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சிகளில் 75 கோடியே 37 இலட்சம் செலவில் 5,257 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு புதிய சாதனை புரிந்துள்ளது இந்த அரசு.

30 ஆண்டுகளுக்கு மேலாக, தங்களுக்கு பட்டா கிடைக்காமல் வீடுகள் கட்டவும், வங்கிகளில் கடன் பெறவும் முடியாமல் இன்னல்களை அனுபவித்து வந்த பொதுமக்கள், முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி, பட்டா கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதுடன், பட்டா வழங்க ஆவன செய்த முதலமைச்சர் அவர்களை நன்றியுடன் போற்றி வருகிறார்கள். மேலும் பட்டா வழங்கிட சீரிய முயற்சி மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்களுக்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.