இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர் என உடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம் என உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கொள்கைக் கூட்டணி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளுடன் இணக்கமாகப் பங்கிட்டுக் கொண்டு களம் காண ஆயத்தமாகிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்வில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, கழகத்தின் சார்பில் களமிறங்கும் 21 வெற்றி வேட்பாளர்களையும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அறிவித்தேன்.
எந்தவொரு தேர்தல் களமாக இருந்தாலும் எதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு களம் காண்கிறோம் என்பதைத் தேர்தல் அறிக்கை வாயிலாகத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து மக்களைச் சந்திப்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தி.மு.கழகம் கடைப்பிடித்து வருகின்ற தேர்தல் நடைமுறை. அதன் வெளிப்பாடுதான், கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 64 பக்கத் தேர்தல் அறிக்கை.
தமிழ்நாடு மீண்டும் உரிமையுடன் திகழ்வதற்காக மட்டுமின்றி, இந்தியாவில் உண்மையான ஜனநாயகமும் கூட்டாட்சிக் கருத்தியலும் நிலைபெறவும் கழகத்தின் சார்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை – நடுத்தர மக்களை அன்றாடம் பாடுபடுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, 500 ரூபாயாகக் குறைப்பது, பெட்ரோல் – டீசல் விலைக் குறைப்பு, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம்.
மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறும் வகையில் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள், ஆளுநரின் அதிகாரங்களுக்குக் கடிவாளம், சி.ஏ.ஏ. சட்டம் இரத்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது, நாடு முழுவதும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், உழவர்களின் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 10 இலட்ச ரூபாய் வட்டியில்லாக் கடன், தமிழ்நாட்டு மீனவர்களின் நலன் காக்கும் சட்டங்கள், மாவட்டந்தோறும் தொழில்வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்குமான திட்டங்கள் உள்ளிட்ட இன்னும் பல வாக்குறுதிகளுடன் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான தேர்தல் அறிக்கையைத் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. உண்மையான புதிய இந்தியாவைக் கட்டமைத்திடும் உன்னத இலட்சியத்துடன், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. களம் காண்கிறது.
கழகத்தின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில் அனுபவமிக்கவர்களும் உண்டு; அறிமுக வேட்பாளர்களும் உண்டு. அனைவருமே உதயசூரியன் சின்னத்தின் வேட்பாளர்கள் என்பது மட்டுமே உடன்பிறப்புகளாம் உங்கள் இதயச்சுவரில் பதிய வேண்டிய செய்தி. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். அவர்களின் வேட்பாளர்களும் நம்மவர்கள்தான். அவர்களின் சின்னங்களும் நம்முடையதுதான். நாற்பது தொகுதிகளில் தனித்தனி வேட்பாளர்கள் நின்றாலும், அனைத்துத் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்கிற உணர்வுடனும் கொள்கை உறவுடனும் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடனும் களப்பணியாற்றிட வேண்டும் என ஒவ்வொரு உடன்பிறப்பையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் களப்பணிகளை ஊக்கப்படுத்திடவும், தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களின் ஆதரவைத் திரட்டிடவும், நாற்பது தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றியினை உறுதி செய்திடவும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேரில் வருகிறேன். நாளை (மார்ச் 22) தீரர் கோட்டமாம், திருப்புமுனைகள் பல தந்த திருச்சியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன். தொடர்ச்சியான பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமைக் கழகம் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கேற்ப அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகத்தினர், தோழமைக் கட்சியினர், ஆதரவு இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளுக்குட்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் கழகத்தின் பரப்புரை இடைவிடாத அளவில் நடைபெற வேண்டும் என்பதற்கேற்ப கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தொடங்கி தலைமைக் கழக நிர்வாகிகளும், கொள்கைப் பரப்பு செயலாளர்களும், தலைமைக் கழகப் பேச்சாளர்களும் தொடர்ச்சியான பரப்புரைப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார்கள். பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் திண்ணைப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜனநாயகப் போர்ப்படையின் முன்கள வீரர்களான கழக உடன்பிறப்புகளிடம் உங்களில் ஒருவனான நான் அடிக்கடி வலியுறுத்துவது போல, வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் மக்களின் உள்ளத்தில் உண்மை நிலவரத்தைப் பதிய வைக்கும். நம்பிக்கையை மேம்படுத்தும். வெற்றியை உறுதி செய்யும்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் எதிரிகள். கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிரிகள். மொத்தமாகச் சொல்வதென்றால், மனித குலத்தின் எதிரிகள்.
பொய் சொல்ல அஞ்சாதது மட்டுமல்ல, பொய்களை மட்டுமே சொல்வது என்பதைக் குறிக்கோளாகவே கொண்டிருக்கிறார்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். பிரதமர் என்கிற மாண்புக்குரிய பொறுப்பை வகிப்பவர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அத்தனை பேருமே பொய்யை மட்டுமே பரப்புரையாக மேற்கொண்டு வருவதை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் வாக்காளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குக் கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் தி.மு.க.வை விமர்சிப்பதும், தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி போடுவதும், தி.மு.க. கூட்டணி பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிவதால், தமிழர்களையே தீவிரவாதிகள் எனச் சித்தரிப்பதும் பா.ஜ.க.வின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது.
நம்மிடம் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கை உள்ளது. ஜனநாயகக் களத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற கண்ணியத்தைக் கற்றுத் தந்த பேரறிஞர் அண்ணாவின் வழிமுறை இருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் தொடரும் ஆட்சியின் சாதனைகள் நிறைந்திருக்கிறது. அவற்றைத் தேர்தல் களத்தின் ஆயுதங்களாகக் கையில் ஏந்துவோம். பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதை வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரிடமும் எடுத்துச் சொல்வோம். அதற்கு அ.தி.மு.க எப்படி துணைபோனது என்கிற துரோகத்தையும் மறக்காமல் எடுத்துரைப்போம். தனித்தனியாக நிற்கும் கள்ளக்கூட்டணியின் முகத்திரையைக் கிழித்திடுவோம். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்களையும் வதந்திகளையும் முறியடிக்கும் வகையில் ஆன்லைன் பரப்புரையையும் முனைப்புடன் மேற்கொள்வோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களிடமும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவைத் திரட்டுவோம். ஒவ்வொரு வாக்கும் நம் ‘இந்தியா’வின் வெற்றியை உறுதி செய்யட்டும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, எளிய மக்களை நடுஇரவில் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, ‘புதிய இந்தியா பிறந்தது’ என்று வெற்று முழக்கமிட்ட பிரதமரும் பா.ஜ.க.வினரும் இப்போது ‘இந்தியா’ என்று உச்சரிக்கவே தயங்குகிறார்கள் என்றால் இதுதான் நாம் கட்டமைத்துள்ள உண்மையான புதிய ‘இந்தியா’வின் முதற்கட்ட வெற்றி. அந்த வெற்றி தேர்தல் களத்திலும் தொடர்ந்திடும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கும்.
இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










