• Sun. Oct 19th, 2025

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த தயங்குவது ஏன்? தினகரன் கேள்வி

Byமு.மு

Feb 22, 2024
அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு சாதகமாக இருக்கிறோம் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அந்த சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த தயங்குவது ஏன்?- இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என சபாநாயகர் அவர்களும் இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 50 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், சாதிவாரி கணக்கெடுபை மத்திய அரசு நடத்தினால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என சபாநாயகர் அவர்கள் கூறியிருப்பது வேடிக்கையானது.

பீகார் மாநிலத்தை பின்பற்றி, கர்நாடகா, ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்புககன பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே தன்னிச்சையாக நடத்தலாம் என்பதற்கும் அதற்கு சட்டரீதியான எவ்வித தடைகளும் இல்லை என்பதற்கும் பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது தமிழகம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்?

சமூகரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையின் முதல் படியான இட ஒதுக்கிட்டின் அளவு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எனவே, மத்திய அரசை காரணம் காட்டி இனியும் காலம் தாழ்த்தாமல், சமூகத்தில் பின் தங்கிய மக்களையும், அவர்களின் மூலமாக நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.