உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் வரும் 2024 ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று (22.12.2023) கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர்/சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் திரு. மு.ஆ. சித்திக், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு. பி. சந்திரமோகன், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர், திரு. வி. அருண்ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. சந்திப் நந்தூரி., இ.ஆ.ப மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை வர்த்தக மையத்தில் இம்மாநாடு நடைபெற உள்ள புதிய கட்டட பணிகளை கள ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் அவர்கள் கட்டுமானப் பணிகளின் தரத்தினை உறுதி செய்வதுடன், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான அறிவுரைகளை வழங்கினார். மேலும், சென்னை வர்த்தக மையப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் குறித்த நேரத்தில் விரைந்து முடிக்கும்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கினார். மேலும், சுற்றுப்புறங்களில் உள்ள கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அக்கட்டடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும்படி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.